விளையாட்டின்போது கல்லூரி மாணவன் உயிரிழப்பு.. பண்ருட்டி அருகே நடந்த சோகம்

 
Panruti

பண்ருட்டி அருகே கபடி விளையாட்டின் போது வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர், பெரியபுறங்கணி முருகன் கோவில் தெருவில் வசித்து வருபவர் விமல்ராஜ் (21). கபடி விளையாட்டு வீரரான இவர் சேலம்
தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி 2-ம் ஆண்டு படித்து வந்த நிலையில், சேலத்தில் உள்ள கபடி அகாடமி ஒன்றில் கபடி பயிற்சி பெற்று வந்தார்.

panruti

இந்த நிலையில் நேற்று இரவு பண்ருட்டி அடுத்த மானடிகுப்பத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடி போட்டியில் விமல்ராஜ் கலந்து கொண்டு விளையாடியபோது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதையடுத்து கீழகுப்பம் கிராம எதிர் அணியை சேர்ந்த வீரர் விமல்ராஜை பிடிக்க முற்பட்ட போது இவரது மார்பில் அடிபட்டு சுயநினைவின்றி கிடந்தார்.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வீரர்கள் உடனடியாக விமல்ராஜை மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

dead-body

இதுகுறித்து  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முத்தாண்டிக்குப்பம் போலீசார் விமல்ராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து  முத்தாண்டிக்குப்பம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web