அண்ணியை இரும்பு ராடால் அடித்து கொன்ற கல்லூரி மாணவன்! திருவள்ளூர் அருகே பரபரப்பு

சத்தமா பட்டாசு வெடிக்காதே என்று கூறி அண்ணன் குடும்பத்தையே இளைஞர் ஒருவர் இரும்பு கம்பியால் தாக்கியதில் பெண் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கன்னிகை பேர் கிராமத்தில் வசித்து வருபவர் சக்திவேல் (52). இவர் எல்லாபுரம் பகுதி திமுக ஒன்றிய கழக செயலாளராக உள்ளார். இவரது மகன் விஷால் (20). இவர், தனியார் பொறியியல் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகின்றார். புத்தாண்டு தினத்தன்று இரவு விஷால், தனது தெருவில் நண்பர்களுடன் பட்டாசு வெடித்து கேக் வெட்டி புத்தாண்டை கொண்டாடியுள்ளார்.
விஷாலுடன் 10-க்கும் மேற்பட்ட நண்பர்கள் மதுபோதையில் கூச்சலிட்டு புத்தாண்டை கொண்டாடியுள்ளனர். இரவு நீண்ட நேரம் ஆகியும் மதுபோதையில் இளைஞர்கள் கூச்சலிட்டு சத்தம் போட்டுள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் விஷாலின் பெரியப்பா மகன் முருகன் மற்றும் அவரது மனைவி ரம்யா மற்றும் பெரியம்மா செல்வி ஆகியோர் விஷாலை கண்டித்துள்ளனர். ஏற்கனவே இருகுடும்பத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்த நிலையில் மது போதையின் உச்சத்தில் இருந்த விஷால் தட்டிக்கேட்டவர்களிடம் தகராறில் ஈடுப்பட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் மதுபோதை வெறியில் இருந்த விஷால், அருகில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து முருகன், ரம்யா மற்றும் தனது பெரியம்மா செல்வி ஆகியோரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த ரம்யா சம்பவ இடத்திலையே ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழந்தார்.
இதை கண்டு அதிர்ச்சியடைந்த விஷால் உடனே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். மேலும் முருகனும் செல்வியும் படுகாயமடைந்தனர். அலறல் சத்தத்தை கேட்டு வந்த அக்கம் பக்கதினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரியபாளையம் போலீசார் சடலத்தை கைபற்றி தப்பியோடிய விஷாலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.