சத்தியமங்கலம் அருகே கிணற்றில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி..! குளிக்க சென்றபோது நேர்ந்த வீபரிதம்!

 
Sathyamangalam

சத்தியமங்கலம் அருகே நண்பருடன் கிணற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள மேட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜசேகர். இவரது மனைவி சரோஜா. கூலித் தொழிலாளர்களான இவர்களுக்கு பாரதி (19) என்ற மகன் இருந்தார். இவர் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பி.பி.எம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று சத்தியமங்கலத்தை அடுத்த பாச்சாமல்லனூரில் உள்ள பாட்டி வீட்டுக்கு சென்றார்.

water

பின்னர் அந்த பகுதியில் உள்ள கிணற்றுக்கு நண்பர் பரணியுடன் குளிக்க சென்றார். நீச்சல் தெரியாத பாரதி குளிப்பதற்காக கிணற்றில் இறங்கிய போது எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கினார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது நண்பர் பரணி சத்தம்போட்டு கத்தினார். அவருடைய சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிச்சென்று கிணற்றில் குதித்து பாரதியை தேடினர். அவர்களால் பாரதியை மீட்க முடியவில்லை. 

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள் பாரதியின் உடலை மீட்டு கிணற்றுக்கு மேலே எடுத்து வந்தனர். அவருடைய உடலை கண்டதும் பாரதியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். 

Sathyamangalam

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சத்தியமங்கலம் போலீசார் பாரதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web