மோட்டர் சைக்கிளை வழிமறித்து 3 பேரை தாக்கிய கரடி!! மருத்துவமனையில் அனுமதி! அதிர்ச்சி வீடியோ

 
Tenkasi

தென்காசியில் கரடி தாக்கியதில் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தற்போது கரடி கடித்து குதறிய வீடியோ வைரலாகி வருகிறது.

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள கலிதீர்த்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் வைகுண்டமணி. மசாலா வியாபாரம் செய்து வரும் இவர், இன்று காலை வழக்கம்போல் கடையம் அருகேயுள்ள சிவசைலத்தில் இருந்து பெத்தான்பிள்ளை குடியிருப்பு என்ற கிராமத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் வியாபாரத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது சாலையின் குறுக்கே திடீரென வந்த கரடி, அவரது மோட்டார் சைக்கிளை மறித்து கீழே தள்ளி கடித்து குதறிக்கொண்டிருந்தது. அப்போது அவரின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.

Tenkasi

இந்த நிலையில், காப்பாற்ற முயன்றபோது பெத்தான்பிள்ளை குடியிருப்பத்தை சேர்ந்த பச்சாத்து என்பவரின் மகன்களான நாகேந்திரன் மற்றும் சைலப்பன் ஆகியோரையும் கரடி கடித்து குதறியது. இதில் மூன்று பேருக்கும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கடையம் வனச்சரகர் கருணாமூர்த்தி மற்றும் வனத்துறையினர் காயம்பட்டவர்களை மீட்டு பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அம்பை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 


தொடர்ந்து அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு தீவீர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

From around the web