9 மாவட்டங்களில் வெளுத்து வாங்க போகும் கனமழை.. வானிலை மையம் அலெர்ட்!

 
Rain

தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (நவ. 15) காலை 8.30 மணி அளவில் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, விசாகப்பட்டினத்திலிருந்து சுமார் 510 கிலோ மீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 16-ம் தேதி வாக்கில் ஆந்திர கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு - வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா கடலோர பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 17-ம் தேதி வாக்கில் நிலவக்கூடும். இது 18-ஆம் தேதி காலை வடக்கு ஒடிசா - மேற்கு வங்க கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும்.

இலங்கை கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (நவ. 15) கடலோர தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள்தமிழ்நாடு மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Rain

நவம்பர் 16 முதல் 19-ம் தேதி வரை, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நவம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

fisherman

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 27-28 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

15.11.2023 மற்றும் 16.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தபட்டுள்ளது.

From around the web