வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது பள்ளி சிறுவன் பரிதாப பலி.. திருவாரூர் அருகே சோகம்!

 
Kudavasal

குடவாசல் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டத்திற்குட்பட்ட தீபங்குடி தெற்குத் தெருவில் வசித்து வருபவர் விவசாய கூலித் தொழிலாளி ராஜசேகர். இவரது மகன் கனிஷ் (8). இவர் அதேபகுதியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் ராஜசேகரின் சகோதரர் பீட்டர் என்பவருக்கு திருமணம் நடக்கவிருப்பதால் தங்களது ஓட்டு வீட்டின் முன்பக்கம் உள்ள கூரை கொட்டகையில் இருந்த கீற்றுகளை அகற்றிவிட்டு பந்தல் போடுவதற்கான வேலை நடந்துள்ளது. 

boy-dead-body

மேலும் வேலையாட்கள் கீற்றுகளை பிரித்து விட்டு கீற்று போடுவதற்காக விட்டுச் சென்ற நிலையில் அந்த கூரைக் கொட்டகையில் உள்ள மண்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்த கனிஷ் மீது மண் சுவர் இடிந்து விழுந்துள்ளது. சுவர் மேலே விழுந்ததால் சிறுவன் சத்தம் போட முடியாமல் சுவருக்கிடையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். 

இதனையடுத்து சிறிது நேரம் கழித்து இதனை கவனித்த குடும்பத்தினர் உடனடியாக சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். 

Kudavasal PS

இதனையடுத்து குடவாசல் போலீசார் சிறுவனின் உடலை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பிரேத பரிசோதனைக்காக வைத்துள்ளனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 8 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web