ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி பலி.. வீட்டில் தனியாக விளையாடிய போது விபரீதம்!

 
chennai

வீட்டில் விளையாடியக் கொண்டிருந்த 8 வயது சிறுமி, ஜன்னல் கயிற்றில் துணி சிக்கி கழுத்து இறுகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை வேளச்சேரி அடுத்துள்ள பெரும்பாக்கம் எழில்நகர் பகுதியை சேர்ந்தவர் உதயா (38). இவரது மனைவி சரண்யா. இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களது மகள் அஸ்வந்தி (8), அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு படித்து வந்தார். தற்போது பள்ளி‌ விடுமுறை என்பதால், நேற்று மகளை வீட்டில் விட்டு கணவன் - மனைவி இருவரும் வேலைக்கு சென்றனர். பின்னர் இரவு வீட்டிற்கு வந்து பார்த்த போது, வீட்டின் கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது.

Dead

உடனே இருவரும் ஜன்னல் வழியே உள்ளே பார்த்த போது மகள் அஸ்வந்தி ஜன்னலில் கட்டி இருந்த ஊஞ்சல் கயிறு மற்றும் துண்டு கழுத்தில் சுற்றிய நிலையில் மயங்கி தொங்கி கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பெற்றோர் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பெரும்பாக்கம் போலீசார், சிறுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் தனியாக விளையாடி கொண்டிருந்த சிறுமி ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web