7 வயது சிறுவனை கடித்துக் குதறிய சிறுத்தை.. விளையாடிக் கொண்டிருந்த போது சோகம்!

 
Valparai

வால்பாறையில் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனை சிறுத்தை தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வால்பாறை சுற்றுவட்டார வனப்பகுதிகளில் புலி, சிறுத்தை, கரடி, யானை, காட்டுமாடு உள்ளிட்ட விலங்குகள் வசித்து வருகின்றன. அவ்வபோது வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள், குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து பொதுமக்களை தாக்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது.

Valaparai GH

இந்த நிலையில், நேற்று வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று வால்பாறை சிறுகுன்று எஸ்டேட் குடியிருப்பு பகுதி அருகில் சுற்றித் திரிந்தது. அப்போது ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் புயான் என்பவரின் 7 வயது மகன் மர்தீப் வீட்டிற்கு வெளியில் விளையாடிக் கொண்டிருந்தான். அங்கு வந்த சிறுத்தை, தனியாக இருந்த சிறுவனை பலமாக தாக்கியது. 

இதில் படுகாயம் அடைந்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் கூச்சலிட்டு சிறுத்தையை விரட்டினர். தொடர்ந்து, சிறுவனை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். சிறுத்தை தாக்கியதில் சிறுவனுக்கு தலை மற்றும் உடலில் நகக்கீறல்கள் காரணமாக பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Valparai

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், எஸ்டேட் பகுதியில் சிறுத்தை பதுங்கி இருக்கிறதா என கண்காணித்து வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு முதற்கட்ட நிவாரண தொகையாக ரூ.10 ஆயிரத்தை, வனத்துறையினர் பெற்றோரிடம் வழங்கினர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

From around the web