கல்லுாரி பேருந்து ஏறியதில் தலை நசுங்கி 6 வயது சிறுவன் பலி.. பைக் ஓட்டி சென்ற தந்தைக்கும் ஏற்பட்ட சோகம்!
திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி அடுத்துள்ள அம்மையப்பா நகரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). இவர், அட்டை கம்பெனியில் டிரைவர் பணிபுரிந்து வந்தார். இவர் தனது 6 வயது மகன் பிரதீஷ்குமாருடன், நேற்று காலை 8 மணிக்கு, இருசக்கர வாகனத்தில் திருச்செங்கோடு அடுத்த தோக்கவாடி பஸ் ஸ்டாப் அருகே சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, திருச்செங்கோட்டில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற தனியார் கல்லுாரி பேருந்து, தோக்கவாடி பஸ் ஸ்டாப் அருகே, சதீஷ்குமார் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது எதிர்பாராதவிதமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில் நிலை தடுமாறி தந்தை, மகன் ஆகிய இருவரும் கீழே விழுந்தனர். அப்போது, தந்தை கண்முன்னே, பிரதீஷ்குமார் மீது பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில், தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதைக் கண்ட சதீஷ்குமார் கதறி அழுதார். பின், படுகாயமடைந்த சதீஷ்குமாரை மீட்ட அப்பகுதி மக்கள், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
சம்பவ இடத்தில் திரண்ட மக்கள், கல்லுாரி வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், திருச்செங்கோடு - ஈரோடு சாலையில், இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த, டி.எஸ்.பி., இமயவரம்பன், பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். திருச்செங்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.