தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் 69.46 சதவீத வாக்குகள் பதிவு.. அதிகபட்சம் தர்மபுரியில் 81.48 சதவீதம்

 
Election

நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

18-வது நாடாளுமன்ற தேர்தல் இன்று (ஏப்ரல் 19) தொடங்கி ஜூன் மாதம் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது. மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் ஓட்டுப்போட தகுதியானவர்கள். அனைவரும் வாக்களிக்க வசதியாக தமிழ்நாடு முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்றது. வாக்குப்பதிவு தொடங்கியது முதலே அரசியல் கட்சி தலைவர்கள், திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் ஆர்வத்துடன் வந்து தங்களது வாக்கினை பதிவு செய்தனர்.

Polling

இவ்வாறு விறுவிறுப்பாக நடந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. ஆனால் அப்போதும் வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. எனவே 6 மணிக்கு முன் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுத்து, 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து நேற்று 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 72.09 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் பதிவான மொத்த சராசரி வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் வதிவான நிலையில், தற்போது 3 சதவீத வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளது.

Polling

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 81.48 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.91 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. சென்னையில் 3 தொகுதிகளிலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலை விட வாக்குப்பதிவு குறைந்துள்ளது.

From around the web