600/600: +2 தேர்வில் திண்டுக்கல் மாணவி வரலாற்று சாதனை..!

 
Nandhani

ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினி 600-க்கு 600 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதிகளவில் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் விருதுநகர் முதலிடம் பெற்றுள்ளது.

பொதுத்தேர்வில் மாணவர்கள் 91.45% தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 96.38% தேர்ச்சி பெற்றுள்ளனர். வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் 326 அரசு மேல்நிலைப்பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது.

school

இந்த நிலையில், ப்ளஸ்-2 பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவி நந்தினி என்பவர் 600-க்கு 600 மதிப்பெண் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி நந்தினி தமிழ், ஆங்கில, பொருளாதாரம், வணிகம், கணக்குப்பதிவியல், கணினிபயன்பாடு என அனைத்து பாடங்களிலும் 100 க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளார். 

மாணவி நந்தினி திண்டுக்கல் நகரில் உள்ள அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வணிகவியல் பாடப்பிரிவை தேர்ந்தெடுத்து படித்து வந்தது குறிப்பிடத்தக்கது. 600-க்கு 600 மதிப்பெண் பெற்ற மாணவியை அந்த பள்ளி ஆசிரியர்கள் கட்டித்தழுவி வாழ்த்து தெரிவித்தனர்.

Nandhini

இது தொடர்பாக மாணவி நந்தினி கூறுகையில், “பெற்றோர், ஆசிரியர்கள் கொடுத்த ஊக்கத்தால் மட்டும் தான் அனைத்து பாடங்களிலும் 100-க்கு 100 மதிப்பெண் எடுக்க முடிந்தது. பெற்றோர் என் மீது எந்த திணிப்பையும் ஏற்படுத்தியது இல்லை. நம்பிக்கையுடன் முயற்சித்தால் அனைத்தும் சாத்தியமாகும். எனக்கு ஆடிட்டராக வேண்டும் என்பது விருப்பம். அதற்கான மேல்படிப்புகளை படிக்க உள்ளேன்” என்று கூறினார்.

From around the web