சத்து மாத்திரைகளை சாப்பிட்டு மயக்கம் போட்டு விழுந்த 6 பள்ளி மாணவிகள்.. தர்மபுரியில் அதிர்ச்சி!!

 
Dharmapuri

பாப்பிரெட்டிப்பட்டி அருகே வகுப்பறையில் சத்து மாத்திரைகளை சாப்பிட்டு பள்ளி மாணவிகள் மயக்கம் போட்டு விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே காந்தள் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான உருது நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் கடந்த 6-ம் தேதி குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. அப்போது 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள் யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என போட்டி போட்டு மாத்திரை உட்கொண்டனர். இந்த போட்டியில் அதிக மாத்திரைகள் உட்கொண்ட மாணவிகள் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக மாணவிகளை மீட்டு ஊட்டி அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர். மூன்று மாணவிகளின் உடல்நிலை சீராகி வந்த நிலையில், சைஃபா பாத்திமா (13) என்ற ஒரு மாணவியின் உடல் நிலை மட்டும் மோசமாகி கொண்டே சென்றதால் சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

Dharmapuri

பின்னர் கோவை அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கடந்த 9-ம் தேதி மாலை மாணவியை அழைத்து சென்றபோது சேலம் அருகே மாணவிக்கு அதிகமான காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சேலம் குமாராப்பாளையம் அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதை தொடர்ந்து மாணவி உயிரிழந்தார்.

இந்த நிலையில், அதேபோல் ஒரு சம்பவம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் நடந்துள்ளது. தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில், வகுப்பறை அலமாரியில் இருந்த சத்து மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் 6-ம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதையடுத்து, 5 மாணவிகள் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். மாணவிகளின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web