பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி பரிதாப பலி.. ராணிப்பேட்டையில் சோகம்!

 
Mambakkam

மாம்பாக்கம் அருகே பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மாம்பாக்கம் ஆதி திராவிட குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் ரமேஷ் (28). இவர் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி அஸ்வினி (25). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில், நவிஷ்கா (4) என்ற பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.

Cheyyar

இந்த நிலையில், அவரது சொந்த ஊரான மாம்பாக்கத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குடும்பத்துடன் பட்டாசு வெடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது, ரமேஷின் அண்ணன் விக்னேஷ் (31) நாட்டு பட்டாசு வெடித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது, விக்னேஷ் வைத்த நாட்டு பட்டாசு சிறுமி மீது சிதறி விழுந்து வெடித்துள்ளது.

இதில் சிறுமியின் மார்பு மற்றும் கைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, உறவினர்கள் சிறுமியை உடனடியாக அருகில் உள்ள செய்யார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

Vazhaipandal PS

சிறுமி உயிரிழந்ததை அறிந்த உறவினர்கள், மருத்துவமனையில் கதறி அழுதது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும், சிறுமியின் உறவினர்கள் 15-க்கும் மேற்பட்டோர் பட்டாசு விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். பட்டாசு விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த வாழைப்பந்தல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

From around the web