கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 தொழிலாளி பலி! சாரம் அகற்றும் போது நேர்ந்த துயரம்!

 
Karur

கரூர் அருகே கழிவுநீர் தொட்டியில் சாரம் அகற்றும் போது 3 தொழிலாளர்கள் விஷவாயு தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் சுக்காலியூர் அடுத்த கரட்டுப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் குணசேகரன். வழக்கறிஞரான இவர் அதே பகுதியில் புதிய வீடு கட்டி வருகிறார். கட்டிட பணியில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு  இந்த வீட்டில் கழிவுநீர் தொட்டி கட்டி முடிக்கப்பட்டது.

Karur

இந்த பணிகள் முடிந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில், கழிவுநீர் தொட்டியின்  உட்புறம் இருந்த சென்டரிங் சவுக்கு கட்டைகள் மற்றும் பலகைகளை அகற்றுவதற்காக கரூர் தாந்தோணிமலை சத்தியமூர்த்தி நகரை சேர்ந்த மோகன்ராஜ் (23), கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கினார். நீண்ட நேரமாகியும் வெளியில் வராததால், கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டியை சேர்ந்த சிவக்குமார் (38) என்பவரும் உள்ளே இறங்கினார்.

அவரும் வெளியே வரவில்லை. இதனால் மணவாசியை சேர்ந்த சிவா (எ) ராஜேஷ்குமாரும் (35) கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியுள்ளார். அவரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த மற்ற பணியாளர்கள், கரூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்களுடன் கழிவு நீர் தொட்டிக்குள் இறங்கினர்.

Thanthontrimalai-PS

அப்போது அங்கு 3 பேரும் மயக்க நிலையில் கிடந்தனர். அவர்களை மீட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 பேரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தாந்தோணிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டதில், கழிவுநீர் தொட்டிக்குள் விஷவாயு தாக்கி இறந்தது தெரிய வந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

From around the web