கண்மாய் நீரில் மூழ்கி 3 பள்ளி மாணவர்கள் பலி.. விளையாட சென்றபோது விபரீதம்... விளாத்திகுளத்தில் சோகம்!!

 
Vilathikulam

விளாத்திகுளம் அருகே விளையாடச் சென்ற 3 பள்ளி மாணவர்கள் கண்மாய் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அடுத்துள்ள சிவலார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் முருகன். இவருக்கு மகேஸ்வரன் (11), அருண்குமார் (9) என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். இதில், மகேஸ்வரன் கிராமத்தில் உள்ள நடுநிலை பள்ளியில் 6-ம் வகுப்பும், அருண்குமார் அதே புள்ளியில் 4-ம் வகுப்பு பயின்று வந்தனர். 

இவர்கள் இருவர் மற்றும் அதே பள்ளியில் 2-ம் வகுப்பு பயின்று வரும் இவர்களது வீட்டின் அருகே உள்ள கார்த்திகேயன் என்பவரின் மகன் சுதன் (7) ஆகிய மூன்று பேரும் கோடை விடுமுறையில் வழக்கம் போல நேற்று மாலையில் ஒன்றாக விளையாடி உள்ளனர்.

water

இந்த நிலையில் மாலையில் விளையாட சென்ற மூன்று சிறுவர்களும் வெகுநேரமாகியும் வீடு திரும்பாத நிலையில் இவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தேடத் தொடங்கியுள்ளனர். அப்போது இச்சிறுவர்களின் சைக்கிள் அக்கிராமத்தின் கண்மாய்க்கரையில் நின்று கொண்டிருப்பதை கண்ட கிராம மக்கள் கண்மாயில் சென்று பார்த்த போது முருகன் என்பவரின் 2வது மகன் அருண்குமாரின் உடல் நீரில் மிதந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் கண்மாயில் இறங்கி தேடிய போது மகேஸ்வரன் மற்றும் சுதன் ஆகிய மேலும் 2 சிறுவர்களின் உடலும் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி ஜெயச்சந்திரன் மற்றும் புதூர் போலீசார், உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Police

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கிராமத்து மக்களிடையே விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோடை விடுமுறையில் விளையாட சென்ற பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த கிராமத்து மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web