கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் பலி... ஆபத்தான நிலையில் 8 பேருக்கு தீவிர சிகிச்சை!! மரக்காணம் அருகே பதற்றம்!

 
Marakkanam

மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த அமரன் (25). இவர், மரக்காணம் கடற்கரையை ஒட்டியுள்ள வம்பாமேடு பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து வந்துள்ளார். அவர் விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை எக்கியர்குப்பம் மீனவர் பகுதியைச் சேர்ந்த ஒரு சிலர் வாங்கி குடித்துள்ளனர். இதில், சங்கர் (55), தரணிவேல் (50),மண்ணாங்கட்டி (47), மற்றொரு மண்ணாங்கட்டி (55), சந்திரன்(65 ), சுரேஷ் (65 ) உள்ளிட்ட 6 பேரும் கள்ளச்சாரய பாக்கெட்டுகளை வாங்கி குடித்துள்ளனர். ஆறு பேரும் வீட்டிற்கு சென்றவுடன் மயக்கடைந்து விழுந்துள்ளனர்.

உடனடியாக உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனை, புதுவை தனியார் மருத்துவமனை, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் அனுமதித்தனர். இதில் ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ், சங்கர் மற்றும் தரணிதரன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

Marakkanam

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல் கண்கானிப்பாளார் ஸ்ரீ நாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியர்குப்பம் கிராமத்தில் சோதனையில் ஈடுபட்டனர், அப்போது மது அருந்தி மயக்க நிலையில் இருந்த தெய்வமணி (35), செந்தமிழன் (35) கிருத்திகை வாசன் (56), ரமேஷ் (52), ராஜமூர்த்தி (60) 5 பேரை மீட்டு காவல்துறை வாகனத்திலேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கிராமம் முழுவதும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வீரானந்தம் (41), விஜயன் (63), வேல்முருகன் (51), ராமு (75), மண்ணாங்கட்டி (60) ஆகியோர் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் மரக்காணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்பு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Marakkanam

தொடர்ந்து 100 க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் பொது மக்கள் கடற்கரையோரங்களில் சாராயம் அருந்திவிட்டு யாரேனும் மயக்கத்தில் உள்ளனரா என தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் சாராயம் வாங்கி குடித்தவர்களின் எண்ணிக்கை 100-ஐ தொடும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மேலும் இவ்வளவு தங்கு தடை இன்றி மீனவ கிராமத்தில் கள்ளச்சாராயம் கிடைக்க பெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவலர்கள் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதால் மரக்காணம் முழுவதும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

From around the web