விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

 
virududnagar

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் முகவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யங்காளை. விவசாயியான அவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரது முதல் மகன் அஜித்குமார் ராணுவத்தில் பணிபுரிகிறார். இவரது 2வது மகன் சுகந்தரபாண்டி காவல் துறையில் பணிபுரிவதற்காக தேர்வெழுதி பதவிக்காக காத்துக்கொண்டிருக்கிறார்.

electric

இந்த நிலையில் இவர்கள் மூவரும் நேற்று இரவு வயலுக்கு செல்வதற்காக அருகில் உள்ள சிவகங்கை மாவட்டம் மாரநாடு கிராமம் வயல் வழியாக சென்றபோது, ஆவரங்காடு கிராமத்தை சேர்ந்த முத்துகருப்பு என்பவர் தனது வயலில் உள்ள கரும்புகளை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வயலை சுற்றி மின்கம்பிகளை போட்டுள்ளார். அதில், சட்ட விரோதமாக மின்சார இணைப்பை கொடுத்துள்ளார். அதில் தெரியாமல் கால் வைத்த மூவரும் ஒருவர் பின் ஒருவராக மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நேற்று இரவு வீட்டைவிட்டு வேளியே சென்ற மூவரும் வீடு திரும்பாததை கண்டு அவரது உறவினர்கள் தேடி சென்ற போது வயல் வெளியில் இறந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து சிவகங்கை மாவட்டம் பழையனூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

virududnagar

இதில், ராணுவ வீரரான அஜித்குமாருக்கு 10 நாட்களுக்கு முன்பு தான் குழந்தை பிறந்தது. அவர் குழந்தையை பார்ப்பதற்காக வீட்டுக்கு வந்த அடுத்த நாளே இந்த சம்பவம் நிகழ்ந்ததால் அக்கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. சிவகங்கை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் காட்டு பன்றிகள் அதிகளவு தொல்லை தருவதால் காட்டு பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு என்றும், இறந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் அளிக்க வேண்டும் என்று கிராமத்து மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

From around the web