மின்னல் தாக்கி 20 வயதான வடமாநில தொழிலாளி பலி.. கோத்தகிரி அருகே சோகம்!!

 
Kotagiri

கோத்தகிரி அருகே கனமழையின் போது மின்னல் தாக்கியதில் வடமாநில தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவரமடைந்துள்ளது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த இடி, மின்னலுடன் கனமழையும் பெய்து வருகிறது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழும் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. தாழ்வான இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க   அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Lightning strike

இந்த நிலையில், நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. குன்னூர் அடுத்த கோத்தகிரி அருகே உள்ள செம்மனாரை கிராமப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியது. அக்கிராமத்தில், பழங்குடியினருக்கான குடியிருப்புகள் கட்டும் பணி நடைபெற்று வரும் நிலையில், அதில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மழையின் போது, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த புரோசெஞ்சிட் ராய் (20), வெட்ட வெளியில் நின்றிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் மீது, திடீரென மின்னல் விழுந்ததில் அவர் அங்கேயே சுருண்டு விழுந்தார். இதனைக்கண்ட அவருடன் பணியாற்றியவர்கள், அவரை மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Kotagiri PS

இது குறித்த தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், ராயின் உடலை பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்டுமான பணிக்காக வந்த வடமாநில தொழிலாளி, மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம், சக தொழிலாளர்கள் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web