2026 சட்டமன்றத் தேர்தல் திட்டம் 1... டிக் செய்த பாஜக!. செயல்படுத்தும் நடிகர் விஜய்!!

தவெக செயற்குழு கூட்டத்தில் நடிகர் விஜய் யை முதல்வர் வேட்பாளராக முன்மொழிந்து , கூட்டணி குறித்து முடிவுகள் எடுக்கும் அதிகாரத்தை நடிகர் விஜய் க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேசிய நடிகர் விஜய் கொள்கை எதிரியுடனும் பிளவுவாத சக்திகளுடனும் ஒரு போதும் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளார்.
பிளவுவாத சக்தி பாஜக என்று அவரே சொல்லிவிட்டார். கொள்கை எதிரி என்றால் அதிமுகவா? திமுகவா? என்ற புதிய குழப்பத்தையும் உருவாக்கியுள்ளார். திமுகவை எதிர்த்து தான் கட்சி தொடங்கிய முதல் நாள் முதல் சொல்லி வருகிறார் நடிகர் விஜய். திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை. அப்படியென்றால் கொள்கை எதிரி அதிமுகவா?
அதிமுக பற்றி எந்தக் கருத்தையும் இதுவரையிலும் சொல்லவில்லை விஜய். ஆக, திமுகவுடன் கூட்டணி இல்லை என்று தான் நீட்டி முழக்கி சொல்லியிருக்கிறார். திமுகவுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற போது நடிகர் விஜய்யின் இந்த பேச்சு குழப்பத்தையே உருவாக்கியுள்ளது. உரை எழுதிக் கொடுத்தவர் அரசியலுக்கு சம்மந்தம் இல்லாத சினிமா வசனகர்த்தாவோ என்னவோ?
அது இருக்கட்டும். பாஜகவுடன் நேரடியாகவோ மறைமுகவாகவோ கூட்டணியில்லை என்பதை மட்டும் தெளிவு படுத்தியுள்ளார் நடிகர் விஜய். அதிமுக - பாஜக கூட்டணியில் அவ்வப்போது சலசலப்புகள் வந்தாலும், இரு கட்சிகளும் நெருங்கி வந்துள்ளதைக் காண முடிகிறது. இந்தக் கூட்டணி உறுதியாகிவிட்டது தொண்டர்கள் ஒன்றுபட்டு வேலை செய்வார்கள் என்று பாஜகவும் நம்பத் தொடங்கியுள்ளது. முன்னாள் அதிமுக அமைச்சரே தமிழ்நாடு பாஜக தலைவராகவும் இருப்பதால், அதிமுக தொண்டர்களை வசப்படுத்துவது எளிது என்ற கணக்குப் போடுகிறது பாஜக.
இந்த நிலையில் திட்டம் 1 ஆன, திமுக வாக்குகளைப் பிரிப்பது என்பதற்கு செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கியுள்ள்னர். அதன் வெளிப்பாடு தான் நடிகர் விஜய் யின் நேற்றையப் பேச்சு. பாஜகவுடன் எந்தக் கூட்டணியும் இல்லை என்று அறிவித்து விட்டால் திமுக ஆதரவு சிறுபான்மை வாக்குகளை நடிகர் விஜய் மூலம் பிரித்து விடலாம் என்பது தான் திட்டம் 1. ஆந்திரா முதல் பீகார், உபி வரையிலும் ஓவைசியை வைத்து சிறுபான்மை இஸ்லாமிய சமுதாய வாக்குகளைப் பிரிக்கும் அதே திட்டத்தைத் தான் நடிகர் விஜய் மூலம் நிறைவேற்றப் பார்க்கிறது பாஜக.முன்னதாக ரஜினியை வைத்து நடத்த முடியாததை, விஜய் யை வைத்து நடத்திவிடலாம் என்ற கணக்கு தான்.
நடிகர் விஜய் க்கு இளைஞர்கள் மத்தியில், குறிப்பாக சினிமா ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது உண்மை தான். அதற்காக ஒட்டு மொத்த இளைஞர்களும் சினிமா ரசிகர்களும் அவர் பக்கம் தான் என்று புஸ்ஸி ஆனந்த் போன்றவர்கள் சொல்வது மிகவும் மிகைப்படுத்தப்பட்ட கூற்றாகும். அனைத்து ரசிகர்களும் விஜய் ரசிகர்களாக இருந்து விட்டால் அஜீத், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் எல்லாம் வேறு மாநிலத்தவர்களா என்ன?
நடிகர் விஜய் யை நம்பி தமிழ்நாட்டின் சிறுபான்மை இன மக்கள் ஏமாறப் போவதில்லை. விஜய் ரசிகர் மன்றம் தான் தவெக என்ற பெயர் மாற்றம் கண்டுள்ளதால், ரசிகர் மன்ற வாக்குகள் நிச்சயம் விஜய் க்கு கிடைக்கும். மற்றபடி பாஜகவின் திட்டம் 1 தோல்வியில் தான் முடியும்.
தேர்தல் நெருங்க நெருங்க, திட்டம் 1 ஐ கைவிட்டு திட்டம் 2, 3 என்று அடுத்தடுத்த திட்டங்களை பாஜக கையிலெடுக்கலாம். அப்படி நடந்தால், அதுவும் நடிகர் விஜய் யின் பேச்சு மூலமாகவே வெளிப்படும்.
- ஸ்கார்ப்பியன்