ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலி.. ஒருவர் மாயம்.. கடலில் குளிக்க சென்றபோது விபரீதம்!! 

 
chennai

திருவொற்றியூரில் கடலில் குளிக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவொற்றியூர் சதானந்தபுரம் தாங்கல் பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவரது மகன் ஹரிஷ் (16). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்தவர் மாரி என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (20) ஆவார். இவர் பொன்னேரியில் உள்ள கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். 

இவர்கள் 2 பேரும் திருவொற்றியூரில் உள்ள சுந்தரபுரம் கடற்கரையில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். அங்கு மாணவர்கள் 2 பேரும், குளித்துக் கொண்டு இருந்தபோது, திடீரென எழுந்து வந்த ராட்சத அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து அங்கு குளித்துக் கொண்டு இருந்த அக்கம் பக்கத்தினர் உடனே தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 

swim

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவொற்றியூர் தீயணைப்பு துறை வீரர்கள் கடலோர காவல் படை வீரர்கள் மற்றும் திருவொற்றியூர் போலீசார், அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நீரில் மூழ்கி மயங்கி கிடந்த 2 பேரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். 

அங்கு மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பலியான இருவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். 

Tiruvottiyur PS

இந்த நிலையில் நண்பர்களுடன் குளித்தபோது, கடலில் மூழ்கி மாயமான மற்றொரு கல்லூரி மாணவரான சந்துரு (20) என்பவரை கடலோர காவல் படை மற்றும் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். கடலில் மூழ்கி பலியான 2 மாணவர்கள் சம்பவம் குறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

From around the web