பேருந்து மீது கார் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி... வீட்டுக்கு தெரியாமல் காரில் சுற்றிய போது நேர்ந்த சோகம்!!

திருச்சி அருகே பேருந்து மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி தென்னூர் பகுதியில் வசித்து வருபவர் பஷீர் அகமது. இவரது மகன் ஷிமர் அஹமது (20). இவர் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் திருச்சி ஈ.வே.ரா. சாலை, கஸ்தூரிபுரத்தை சேர்ந்த சுரேஷ் மகன் அர்ஜுன் (20). இவர் சென்னை லயோலா கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் பொங்கலையொட்டி கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டதால் சென்னையில் இருந்து வந்திருந்த அர்ஜுன் தனது நண்பர் ஷிமர் அகமதுவை பார்க்க சென்றார்.
பின்னர் ஷிமர் அகமதுவின் தந்தை பஷீர் அகமதுக்கு சொந்தமான காரை எடுத்துக்கொண்டு இருவரும் தங்களது பெற்றோரிடம் எந்தவித தகவலும் சொல்லாமல் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் ஊர் சுற்றுவதற்காக வெளியில் சென்றனர். நேற்று அதிகாலையில் இவர்கள் விராலிமலையில் இருந்து திருச்சியை நோக்கி திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் காரில் அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. அதிகாலை 3.20 மணி அளவில் திருச்சியை அடுத்த மணிகண்டம் அருகே திருச்சி - புதுக்கோட்டை மாவட்ட எல்லையான எரங்குடி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டிருந்தனர்.
தற்போது, அப்பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் சாலையின் இருபுறமும் குழி தோண்டி ஜல்லிக்கற்கள் மற்றும் மண் குவித்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே உள்ள தடுப்பு கட்டை மீது மோதியது. தொடர்ந்து சாலையின் மறுபுறம் சென்ற கார் எதிரே சென்னையில் இருந்து திருநெல்வேலி நோக்கி பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து மீது மோதியது.
மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இதில் காரில் இடிபாடுகளுக்குள் சிக்கி கல்லூரி மாணவர்கள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதிர்ஷ்டவசமாக பேருந்தில் வந்தவர்களுக்கு எந்தவித காயமும் இல்லை.
விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் மற்றும் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து ஆகியோர் விசாரணை நடத்தினர். பின்னர் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்து கிடந்த கல்லூரி மாணவர்கள் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து மணிகண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து தனியார் பேருந்து ஓட்டுநர் திருநெல்வேலி மாவட்டம், பருத்திப்பாடு, மறவன்குளம் பகுதியை சேர்ந்த சாலைகுமரன் (60) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பின்னர் பேருந்து பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்தால் நேற்று அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து நடந்த இடத்திலிருந்து இறந்த மாணவர்களின் செல்போனை கைப்பற்றி அதில் இருந்து அவர்களது பெற்றோருக்கு தகவல் தெரிவித்த போது மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருப்பதாகவும், பின்னர் அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்துவிட்டு தங்களது பிள்ளைகள் வீட்டில் இல்லை எங்களது பிள்ளைகளுக்கு என்ன ஆயிற்று என்று பதற்றத்துடன் கேட்டனர். பின்னர் விபத்து குறித்து மாணவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர்களுக்கு தெரியாமல் காரை எடுத்துக்கொண்டு வெளியே சென்ற மாணவர்கள் விபத்தில் சிக்கி இறந்தது அப்பகுதியினர் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.