கழன்று ஓடிய சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலின் 2 பெட்டிகள்... பதறிப்போன பயணிகள்!

 
Cheran-express

சென்னையில் இருந்து கோவை சென்ற சேரன் விரைவு ரயில் திருவள்ளூர் அருகே சென்ற போது இரு பெட்டிகளின் இணைப்பு துண்டாகியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னையில் இருந்து கோவை வழியாக தினமும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும், மக்களிடம் அதிகம் வரவேற்பை பெற்ற ரயில் சேரன் விரைவு ரயில். இந்த ரயிலில் இரவில் பயணத்தை தொடங்கினால் அதிகாலையில் கோவைக்கு சென்று விடலாம். இதன் காரணமாகவே ஏராளமானோர் இந்த சேரன் விரைவு ரயிலில் பயணம் செய்ய விரும்புவார்கள்.

இந்த நிலையில் வழக்கம்போல் நேற்று இரவு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட சேரன் விரைவு ரயில் திருவள்ளூர் அருகே இரவு 11 மணிக்கு சென்றபோது எஸ்7 மற்றும் எஸ்8 ஆகிய 2 பெட்டிகளிடையே பயங்கர சத்தம் ஏற்பட்டுள்ளது.

Cheran-express

இதனால் ரயிலில் பயணித்த ரயில் பயணிகள் பயத்தில் அலறினர். திருவள்ளூர் ரயில் நிலையத்தின் 4-வது மேடையில் ரயில் சென்ற போது திடீரென்று இரண்டு பெட்டிகளை இணைக்கும் இணைப்பு கொக்கி துண்டிக்கப்பட்டு பலத்த சத்தம் கேட்டதால் ரயில் ஓட்டுநர் சாமர்த்தியமாக ரயிலை நிறுத்தினார்.

ஓட்டுநரின் சாமர்த்தியத்தாலும் பெருத்த உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு ரயில்வே ஊழியர்கள் ரயில் பெட்டிகளின் இணைப்பு துண்டிக்கப்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர். இதனால் ரயில் பயணிகள் தவிக்கும் நிலை ஏற்பட்டது. 

tiruvallur

இந்த சம்பவம் குறித்து திருவள்ளூர் இருப்புப்பாதை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பின்னர், சென்னை பெரம்பூர் கேரேஜில் இருந்து இணைப்பு கொக்கிகள் புதியதாக வரவழைக்கப்பட்டு அவை விரைவு ரயிலுடன் இணைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரத்திற்கு பின் அரக்கோணம் மார்க்கமாக கோவைக்கு புறப்பட்டு சென்றது. நள்ளிரவு நேரத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பயணிகள் இடையே அச்சத்தை ஏற்படுத்தியது.

From around the web