லாரி விபத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலி.. கோவிலுக்குச் சென்ற போது நேர்ந்த சோகம்!

 
Ambur

ஜோலார்பேட்டை அருகே புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்து உள்ள பெரியகம்மியம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் பரந்தாமன். இவரது மனைவி காவேரி. இந்த தம்பதிக்கு கார்த்திகா ஸ்ரீ (9), பேரரசி (6), இளவரசி என்கிற 3 மகள்கள் இருந்தனர். ஆங்கில புத்தாண்டையொட்டி ஆம்பூரில் உள்ள பெரிய ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்ல பரந்தாமன் முடிவு செய்தார்.

அதன்படி பரந்தாமன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் பைக்கில் ஆம்பூர் நோக்கி சென்றார். அப்போது ஆம்பூர் அடுத்த மாராப்பட்டு அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியை அதன் ஓட்டுநர் இடது பக்கமாக திடீரென திருப்பினார். அப்போது பரந்தாமன் சென்ற பைக் லாரியில் மோதியது. அனைவரும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.

Accident

அப்போது கார்த்திகா ஸ்ரீ, பேரரசி ஆகியோர் லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பரந்தாமன் அவரது மனைவி காவேரி மற்றொரு மகள் இளவரசி ஆகியோர் காயங்களுடன் உயிர்த்தப்பினர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் லாரி சக்கரத்தில் சிக்கி இறந்த 2 சிறுமிகளின் பிணத்தையுய் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Ambur Taluk PS

ஆம்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர். புத்தாண்டையொட்டி கோவிலுக்கு சென்றபோது 2 சிறுமிகள் விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

From around the web