கடலூரில் ஒரே மீன்வலையில் சிக்கிய 150 டன் மீன்கள்.. கரைக்கு கொண்டு வர முடியாமல் விட்டு வந்த மீனவர்கள்.. வைரல் வீடியோ!
கடலூர் மாவட்டத்தில் வரலாறு காணாத அளவிற்கு ஒரே மீன்வலையில் 150 டன் மீன்கள் சிக்கியது மீனவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளது. இந்த மீன் பிடி தொழிலை நம்பி சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் உள்ளனர். மீனவர்கள் விசைப்படகு, பைபர் படகு, கட்டு மரங்களில் கடலுக்கு சென்று மீன் பிடித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடலூர் தேவனாம்பட்டினம் பகுதியைச் சார்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
அப்போது வலையில் அதிர்ஷ்டவசமாக 150 டன் பெரும் பாறை வகையைச் சார்ந்த பாறை மீன்கள் பிடிபட்டது. இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். எடை காரணமாக இவற்றை முழுமையாக கடலில் இருந்து கரைக்கு கொண்டு வரமுடியாது என்பதாலும், மீன்கள் பலவும் இணைந்து வலைகளை கிழிக்கத் தொடங்கியதாலும், ஒரே நேரத்தில் 150 டன் மீன்களும் துள்ளி குதித்ததாலும் சுமார் 100 டன் மீன்களை மட்டுமே மீனவர்கள் கரைக்கு கொண்டு வந்தனர்.
50 டன் மீன்களை கடலில் விட்டு வந்த #கடலூர் மீனவர்கள்
— கடலூர் மாநகராட்சி☔💧🎑 (@CuddaloreC) October 6, 2024
கடலூரில் மீனவர்கள் வலையில் சிக்கிய 150 டன் மீன்கள்; வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.#Cuddalore pic.twitter.com/Hfn9kTXKr3
மீதமிருந்த மீன்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக கடலில் அறுத்து விடப்பட்டன. ஒருவேளை மீத மீன்களுக்கு மீனவர்கள் ஆசைப்பட்டிருந்தால் அவர்கள் சென்ற படகே கவிழும் அளவிற்கு ஆபத்தாகியிருக்கும் என சொல்லப்படுகிறது.