ரூ.90.52 கோடியில் 150 புதிய பேருந்துகள்.. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
படுக்கை வசதி கொண்ட 150 அதிநவீன சொகுசு பேருந்துகளின் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னையில் பேருந்து போக்குவரத்தானது தினசரி லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் முக்கிய போக்குவரத்தாக இருந்து வருகிறது. ஒருபுறம் ரயில் போக்குவரத்து முக்கியமானதாக இருந்து வரும் நிலையில் பேருந்து போக்குவரத்தும் பல்வேறு வழித்தடங்களுக்கு இயக்கப்படுவதால் மக்கள் அனைவரும் பேருந்துகளில் அதிகளவில் பயணம் செய்கின்றனர். பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக பல்வேறு வழித்தடங்களில் புதிய பேருந்துகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல் பழைய பேருந்துகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஏசி பேருந்துகள், மின்சாரப்பேருந்துகள் என பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகத்திற்காக 150 புதிய பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் இருந்து புதிய பேருந்துகளின் சேவைகளை அமைச்சர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதற்காக விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 90 கோடி 52 லட்சம் ரூபாய் செலவில் 150 BS 6 ரக பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.
பேருந்துகள் அனைத்தும் இருக்கை மற்றும் படுக்கை வசதி உள்ள 150 அதிநவீன சொகுசு பேருந்துகளாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகள் அனைத்தும் சொகுசு வசதியுடன் இருப்பதால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், அமைச்சர் சேகர்பாபு மற்றும் மேயர் பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். ஏராளமான பொதுமக்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேருந்துகளில் ஏறி பயணம் செய்தனர்.