15 அடிக்கு வெள்ள நீர்.. தந்தையை காப்பாற்ற சென்ற மகன் உயிரிழப்பு!
பள்ளிக்கரணை பகுதியில் தந்தையை தேட சென்ற மகன் மழை நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில் 3 நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயலின் தாக்கத்தால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. 36 மணி நேரம் இடைவிடாது கொட்டிய கனமழையால் சென்னை மாநகரமே தத்தளித்தது. குறிப்பாக சென்னையின் போரூர், காரப்பாக்கம், மணப்பாக்கம், முகலிவாக்கம், வேளச்சேரி, மேடவாக்கம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர், மேற்கு தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் இடுப்பளவு முதல் 15 அடி வரை வெள்ள நீர் சூழ்ந்தது.
சில பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாமல் உள்ளது. மக்கள் உள்ளேயே சிக்கி இருக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. பல இடங்களில் 40 மணி நேரமாக மின்சாரம் இல்லை. குடிநீர் இல்லை. மக்கள் கடுமையாக இதனால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரு பக்கம் அரசின் மீட்பு பணிகள் நடக்க இன்னொரு பக்கம் தன்னார்வலர்களும் மீட்பு பணிகளை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் அருண் என்ற இளைஞர் 3 நாட்களுக்கு முன்பு தனது குடும்பத்தினர் வெள்ளத்தில் சிக்கியதை கண்டு மீட்கச் சென்ற நிலையில் அவர் திடீரென மாயமானார். காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தர வேண்டுமென அரசு அதிகாரிகளுக்கும் போலீசாருக்கும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் போலீசார் அருணின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டுச் சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் 3 நாட்களுக்குப் பின் இன்று காலை மூட்டை போல மிதந்து வந்த பொருளைக் கண்ட அப்பகுதி மக்கள் அருகில் சென்று பார்த்த போது காணாமல் போன அருணின் சடலம் என்பது தெரிய வந்தது.
இதனை அடுத்து அருணின் உறவினர்கள் போலீசாருக்கும் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்ததனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அருணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பெற்றோர்களை காப்பாற்ற சென்ற மகன் சடலமா மீட்கப்பட்டுள்ள சம்பவம் பள்ளிக்கரணை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.