நெரிசலில் சிக்கி 14 வயது சிறுமி பலி.. எடப்பாடி பழனிசாமி நிவாரண நிகழ்ச்சியில் விபரீதம்!
சென்னை கொருக்குப்பேட்டையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி நிவாரண உதவி வழங்கியபோது, கூட்ட நெரிசலில் சிக்கி, சிறுமி உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை உட்பட 4 மாவட்டங்களில் பெருமழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சரிந்தன. தேசிய பேரிடர் மீட்பு படை, தன்னார்வலர்கள், மாநகராட்சி சார்பில் மீட்பு பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மீட்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் மழை வெள்ளத்தால் பாதித்த திருவொற்றியூர், ராயபுரம், அரும்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் பார்வையிட்டு, நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதியில், வடசென்னை மாவட்ட அதிமுக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் ஏற்பாட்டில் 2 ஆயிரம் பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், எடப்பாடி பழனிசாமி பங்கேற்று நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, கூட்ட நெரிசலால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சிக்கிய 14 வயது சிறுமி, தடுமாறி கீழே விழுந்தார். இதை கவனிக்காத பொதுமக்கள் சிறுமியை மிதித்ததில் படுகாயமடைந்தார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சுதாரித்தவர்கள் அவரை மீட்டு, அருகில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமிற்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதை கேட்டு சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். இது பார்ப்பவர்களின் கண்களில் சோகத்தை ஏற்படுத்தியது.
போலீசார் விசாரணையில், உயிரிழந்த சிறுமி தண்டையார்பேட்டை கருணாநிதி நகர், 3வது தெருவை சேர்ந்த வேலு (45), சொக்கம்மாள் (38) தம்பதியின் மகள் யுவஸ்ரீ (14) என்பது தெரிய வந்தது. வேலு மனைவியுடன் மாநகராட்சி 38வது வார்டில் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து வருவதும், இவர்களுக்கு ஜெகன் (12) என்ற மகனும் உள்ளார். யுவஸ்ரீ தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவர் தனது அத்தை லட்சுமியுடன் எடப்பாடி பழனிசாமி வழங்கும் நிவாரண பொருட்களை வாங்குவதற்காக கொருக்குப்பேட்டை சுண்ணாம்பு கால்வாய் பகுதிக்கு சென்றபோது, கூட்ட நெரிசலில் சிக்கி படுகாயமடைந்து இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தால், நிவாரண பொருட்களை வாங்க வந்தவர்கள் பாதியிலேயே திரும்பி சென்றனர்.
இதனால், எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவினர் நிகழ்ச்சியை பாதியில் நிறுத்திவிட்டு, பொருட்களை அங்கிருந்து எடுத்துச் சென்றனர். இந்த சம்பவம் கொருக்குப்பேட்டை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. எடப்பாடி பழனிசாமி வருவதால் அதிக கூட்டத்தை காண்பிக்க வேண்டும் என்பதற்காக, அதிமுகவினர் எந்த ஒரு வழிமுறையும் கடைபிடிக்காமல், ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்காமல், ஒரே நேரத்தில் பலரை அங்கு திரட்டியதால், நெரிசலில் சிக்கி சிறுமி உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறும்போது, “சிறுமி இறந்தது குறித்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் சிறுமி இறப்பின் உண்மை நிலவரம் தெரியவரும்” என்றனர்.