வெயில் கொடுமையால் மயங்கி விழுந்த 14 வயது சிறுவன் பலி.. மலை உச்சிக்கு ஏறிய போது நிகழ்ந்த சோகம்!

 
Rathinagiri

ராணிப்பேட்டை அருகே குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கு சென்ற 14 வயதுடைய சிறுவன் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பகுதியில் உள்ள டி.சி குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (43). முன்னாள் ராணுவ வீரரான இவருக்கு வெண்ணிலா (40) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு அர்ஷன் (14), பரத் (12) என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களின் குலதெய்வ கோவில் பக்கத்துக் கிராமமான நத்தம் பகுதியில் உள்ள மலை மீது அமைந்துள்ளது. அங்குள்ள மூங்கில் வாழி அம்மன் கோவில் தான் இவர்களின் குலதெய்வ கோவிலாகும். 

boy-dead-body

இந்த நிலையில் நேர்த்திக்கடன் செலுத்த சத்யா தனது மனைவி மற்றும் இரண்டு மகன்களை குலதெய்வ கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு மலை அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு இவர்கள் குடும்பத்துடன் நடந்தே சென்றுள்ளனர். அப்போது அதீத வெயில் சுட்டெரித்த நிலையில், திடீரென நடந்து சென்று கொண்டிருந்த சத்யாவின் மூத்த மகன் அர்ஷன் மயங்கி விழுந்து உள்ளார். 

இதையடுத்து பதறிய சத்யா குடும்பத்தினர் அர்ஷனை எழுப்ப முயன்றுள்ளனர். இருப்பினும், எவ்வளவு முயன்றும் அர்ஷனை எழுப்ப முடியவில்லை. இதையடுத்து அவரை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அர்ஷனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அர்ஷன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.

Rathinagiri PS

தகவல் அறிந்து வந்த ரத்தினகிரி போலீசார், உயிரிழந்த சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web