ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று முதல் அடுத்த 2 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு!

 
Ramanathapuram

ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நாளை மறுநாள் (செப். 11) தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. அடுத்த மாதம் (அக். 30) பசும்பொன்னில் தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கை கருத்தில் கொண்டு இன்று முதல் (செப். 9) 2 மாத காலத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பித்து, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவிட்டுள்ளார்.

Johnny-varghesse

இதன் காரணமாக மாவட்டத்தில் பொதுக்கூட்டங்கள், போராட்டங்கள், பேரணிகள் நடத்தத் தடை விதிக்கப்படுகிறது. மேலும்,பொது இடங்களில் 5-க்கும் மேற்பட்டோர் கூடவும் தடை விதிக்கப்படுகிறது. இன்று நள்ளிரவு முதல் 15-ம் தேதி வரையும், அதேபோல அக்டோபர் 25 முதல் 31-ம் தேதி வரையும் தலைவர்களின் நினைவு, பிறந்த நாள் நிகழ்ச்சிகளுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து வாடகை வாகனங்களில் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இமானுவேல் சேகரன் நினைவு நாள் காரணமாகப் பாதுகாப்புப் பணியில் மாவட்டம் முழுக்க சுமார் 7 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். மாவட்ட எல்லைப் பகுதிகளில் மொத்தம் 145 கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேலும், பரமக்குடியில் கன்டிரோல் ரூம் அமைத்துக் கண்காணித்து வருகிறோம். மேலும், இமானுவேல் சேகரன் நினைவிடம் அருகே புதிதாகப் புறக்காவல் நிலையம் ஒன்றை அமைந்து உள்ளோம்.

144

வாடகை வாகனங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து வருவோருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ள நிலையில், சொந்த வாகனங்களில் வருவோர் டிஎஸ்பி அலுவலகங்களின் வாகன அனுமதிச்சீட்டு பெற்று வர வேண்டும். வாகனங்களில் ஒலிபெருக்கிகள் எதுவும் அமைத்து இருக்கக் கூடாது. வரும் வழிகளில் பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

அஞ்சலி செலுத்துவோரின் வசதிக்காக அரசு பேருந்து கழகம் மூலம் 200 பேருந்து வசதி செய்து தரப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி பேருந்துகளில் ஒரு போலீசாரும் பயணிப்பார். இதுவரை 10 அரசியல் தலைவர்கள் மட்டுமே நேரம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். தனி நபர்களைப் பொறுத்தவரை இதுவரை 795 பேர் சொந்த வாகனங்களில் வர அனுமதி கேட்டுள்ளனர்.

From around the web