12-ம் வகுப்பு மாணவி மர்ம மரணம்... போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல்!! கள்ளக்குறிச்சியில் பதற்றம்

 
Kallakuruchi

கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் நடத்திய போராட்டத்தில் போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி (17). இவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு பயின்று வந்தார்.

Kallakuruchi

இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி விடுதியின் 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு பள்ளி நிர்வாகம் தகவல் தெரிவிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர்களும் உறவினர்களும் பதறிப் துடித்தபடி பள்ளிக்கு விரைந்தனர். தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்குச் சென்று மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ள மாணவியின் உடலை வாங்க மறுத்து பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 5-வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில் கள்ளக்குறிச்சி-சின்னசேலம் அருகே தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தனர். அப்போது போலீசார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்க தொடங்கினர். இதில் போலீசார் பலர் காயம் அடைந்தனர். இதனால் அந்த பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவிவருகின்றது.

From around the web