லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் பலி!!

 
lift

திருமண மண்டபத்தில் லிப்ட் அறுந்து விழுந்த விபத்தில் 11-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள திருமண மண்டபத்தில் நேற்று திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த திருமண மண்டபத்தின் 2வது தளத்தில், வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு பரிமாறப் பட்டுள்ளது.

இதனால், கேட்டரிங் பணியில் ஈடுபட்டிருந்த 3 பேர் லிப்டில் இரண்டாவது மாடிக்கு பெரிய பாத்திரத்தில் உணவுடன்  பயணம் செய்துள்ளனர். அப்போது லிப்டின் இரும்பு ரோப் பாரம் தாங்காமல்  அறுந்து கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவரோடு லிப்டில் பயணம் செய்த இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின்பு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்காக   சேர்க்கப்பட்டுள்ளனர். தலை நசுங்கி உயிரிழந்த மாணவன் சீத்தல் உடல் பொன்னேரி அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மாணவன் குறித்து போலிசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தைச் சேர்ந்த 11-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவன் சீத்தல் (19) என்பது தெரியவந்துள்ளது. மேலும், படுகாயம் அடைந்த இருவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த  ஜெயராமன் (23), விக்னேஷ் (21) என்பது தெரியவந்துள்ளது.

11-ம் வகுப்பு தேர்வு நடைபெற்று வரும் சூழலில் குடும்ப வறுமை காரணமாக வேலைக்கு வந்த இடத்தில்  மாணவன்  உயிரிழந்த  சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அடுத்து திருமண மண்டப உரிமையாளர் ஜெயபிரியா, மேனேஜர் திருநாவுக்கரசு, சூப்பர்வைசர் வெங்கடேசன், லிப்ட் ஆபரேட்டர் கக்கன் ஆகிய 4 பேர் வழக்குப்பதிவு செய்த நிலையில், 3 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமண மண்டப உரிமையாளர் ஜெயபிரியா, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web