11 பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

 
school

அருள்மிகு கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

கோவில் நகரம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மையப்பகுதியில் அருள்மிகு சுந்தராம்பிகை உடனுறை அருள்மிகு கச்சிபேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் தலை சம்பந்தப்பட்ட நோய்கள் தீர்க்கும் பரிகார ஸ்தலமாகவும் விளங்கி வருகிறது. இதன் காரணமாக இந்த கோவிலுக்கு தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்த கோவிலின் கும்பாபிஷேகம்  கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்றது.

Kanchipuram

இந்த நிலையில் 18 ஆண்டுகளுக்கு பிறகு இன்று (பிப். 1) காலை 9.30 மணி முதல் 11 மணி வரை கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவுக்கு ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், கச்சபேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் இன்று (01.02.2024) 11 பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி உத்தரவிட்டுள்ளார்.

Local-holiday

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காஞ்சிபுரம் அருள்மிகு கச்சபேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு இன்று  நடைபெறுவதை முன்னிட்டு இக்கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இக்கோவிலை சுற்றி மிக அருகாமையில் அமைந்துள்ள 1. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி, 2. அரசு கா.மு.சுப்பராய முதலியார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 3. அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளி பெரிய காஞ்சிபுரம், 4. அந்திரசன் பள்ளி, 5. பச்சையப்பன் ஆடவர் மேல்நிலைப்பள்ளி, 6. ஸ்ரீநாராயணகுரு மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, 7. ராயல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 8. சி.எஸ்.ஐ நடுநிலைப்பள்ளி, 9. எஸ்.எஸ்.கே.வி.பள்ளி நிறுவனத்திற்கு சொந்தமான மேலும் இரு பள்ளிகள், 10. ஒ.பி.குளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, 11. அரசு கா.மு.சுப்பராயமுதலியார் தொடக்கப் பள்ளி ஆகிய பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக்கு வருவதில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதுடன், பள்ளிக்கு வருவதில் சிரமம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் மேற்படி பள்ளிகளுக்கு இன்று  ஒருநாள் மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிடப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. 

From around the web