10 மற்றும் 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது... ரிசல்ட் பார்ப்பது எப்படி?

 
Result

தமிழ்நாட்டில் 10 மற்றும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரை 3,986 தேர்வு மையங்களில் நடத்தப்பட்டன. இந்த தேர்வினை 9,38,291 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். அதேபோல் 11ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 14-ம் தேதி துவங்கி ஏப்ரல் 5ம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 3,60,908 மாணவர்கள், 4,12,779 மாணவிகள் என மொத்தமாக 7,73,688 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

exam

இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைந்துள்ள புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தின் முதல் தளத்தில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளது.

10ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என்றும், 11ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

Exam

மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும் (National Informatics Centres) அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.

From around the web