தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 10,975 சிறப்பு பேருந்துகள்... நவம்பர் 9-ம் தேதி முதல் இயக்கப்படுகிறது!

 
bus

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசின் போக்குவரத்து கழக தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நவம்பர் 12-ம் தேதி தீபாவளி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை கொண்டாட சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். சென்னையில் வேலை நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், படிப்பு நிமித்தமாக தங்கி இருப்பவர்கள், வெளி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.

அவர்கள் சிரமமின்றி பயணம் செய்வதற்கு வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் ஆண்டு தோறும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். சென்னையில் இருந்து கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோவில், தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இதேபோல் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் விடப்படும்.

இந்த நிலையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையையொட்டி, சிறப்பு பேருந்துகள் இயக்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் துறை செயலாளர் பணீந்திர ரெட்டி, சிறப்பு செயலாளர் வெங்கடேஷ், ஆணையர் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள், போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர்கள் பங்கேற்றனர்.

Bus

ஆலோசனைக் கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரையில் சென்னையில் இருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 10,975 பேருந்துகளும், பிற ஊர்களில் இருந்து மேற்கண்ட 3 நாட்களுக்கு 5,920 சிறப்பு பேருந்துகளும் என மொத்தமாக 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர், பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 13-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையில் தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,167 சிறப்பு பேருந்துகளும் என 3 நாட்களும் சேர்த்து ஒட்டு மொத்தமாக 9,467 பேருந்துகள், மற்ற பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,825 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,292 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

வருகிற 9-ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக சென்னையில் இருந்து 1,365 சிறப்பு பேருந்துகளும், 10-ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,895 சிறப்பு பேருந்துகளும், 11-ம் தேதி வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,415 சிறப்பு பேருந்துகளும் என சென்னையில் இருந்து மொத்தம் 10,975 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 9-ம் தேதி 1,100 சிறப்பு பேருந்துகளும், 10-ம் தேதி 2,710 சிறப்பு பேருந்துகளும், 11-ம் தேதி 2,110 சிறப்பு பேருந்துகளும் என 5,920 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் 10,595 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தமிழ்நாடு முழுவதும் மொத்தமாக 3 நாட்களிலும் 16,895 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

Bus

சென்னை மாதவரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து செங்குன்றம் வழியாக பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கே.கே.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கடலூர் மற்றும் சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தாம்பரம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிலையத்தில் இருந்து திண்டிவனம் மார்க்கமாக திருவண்ணாமலை செல்லும் பேருந்துகள், போளூர், சேத்துப்பட்டு, வந்தவாசி, செஞ்சி மார்க்கமாக செல்லும் பஸ்கள், திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லி பைபாஸ் சாலை பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து மயிலாடுதுறை அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், கன்னியாகுமரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், விருதுநகர், திருப்பூர், ஈரோடு, ஊட்டி, ராமநாதபுரம், சேலம், கோவை மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தீபாவளி முடிந்து சென்னை திரும்புவதற்காக வருகிற 13-ம் தேதி பல்வேறு இடங்களில் இருந்து சென்னைக்கு வழக்கமாக இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 1,275 சிறப்பு பேருந்துகளும், 14-ம் தேதி 2,100 பேருந்துகளுடன் கூடுதலாக 975 சிறப்பு பேருந்துகளும், 15-ம் தேதி 2,100 பேருந்துகளும், கூடுதலாக 917 பேருந்துகளும் என 3 நாட்களும் மொத்தம் 9,467 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னையை தவிர்த்து இதர இடங்களுக்கு 13-ம் தேதி 1,250 சிறப்பு பேருந்துகளும், 14-ம் தேதி 1,395 சிறப்பு பேருந்துகளும், 15-ம் தேதி 1,180 சிறப்பு பேருந்துகளும் என மொத்தம் 3,825 சிறப்பு பேருந்துகள் விடப்படுகின்றன என்று கூறினார்.

From around the web