மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 10, 11 மற்றும் 12 பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு!

10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு உள்ளார்.
தமிழ்நாட்டில் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகள் பொதுத்தேர்வுக்கு தயாராகும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை முன் கூட்டியே வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2023-24-ம் கல்வியாண்டுக்கான பொதுத் தேர்வு அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் மாணவ - மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.
அந்த வகையில் 2023 - 2024 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை இன்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டு உள்ளார்.
இன்று காலை 9.30 மணியளவில் சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்து உள்ள அண்ணா நூற்றாண்டு நினைவு நூலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டு உள்ளார். அதன்படி 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் 2024-ம் ஆண்டு மார்ச் 1-ம் தேதி தொடங்கி மார்ச் 22-ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 12 முதல் 17 வரை 12-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகும்.
11-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 21-ம் தேதி வரை நடைபெறும். பிப்ரவரி 19 முதல் 24 வரை 11-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 14-ம் தேதி வெளியாகும். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 26-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ம் தேதி நிறைவடையும். பிப்ரவரி 23 முதல் 29 வரை 10-ம் வகுப்புக்கான செய்முறைத் தேர்வு நடைபெறும். 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10-ம் தேதி வெளியிடப்படும்.