பெரியாருக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

 
MK Stalin

பெரியாருக்கு தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் அம்பேத்கர் என்று அம்பேத்கரின்  நினைவுநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்

சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அம்பேத்கர் நினைவு நாளில் அவரைப் போற்றி வணங்கி விட்டு உரையைத் தொடங்குவதாகக் குறிப்பிட்டு பேசினார்.

”அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இல்லை. தனக்குத் தலைவராக இருக்கும் தகுதி படைத்தவர் என்று தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கரை புகழ்ந்துள்ளார்.

அம்பேத்கரின் சிந்தனைகளை திமுக அரசு போற்றி வருகிறது. அம்பேத்கர் காட்டிய பாதையில் திராவிட மாடல் அரசு நடைபோடுகிறது. அம்பேத்கருக்கு நிகரான தலைவர் இல்லை. அம்பேத்கர் பிறந்தநாளை சமுத்துவநாளாக எனது ஆட்சியில் தான் அறிவிக்கப்பட்டது. 100 கோடி ரூபாய் முதலீட்டில் அம்பேத்கர் தொழில் முன்னேற்றத் திட்டம் தொடங்கப்பட்டது.

அதிகாரிகள், காவலர்கள், தூய்மை பணியாளர்கள் சிறப்பாக செயல்படுவதால் அரசுக்கு நற்பெயர் கிடைத்துள்ளது. தூய்மை பணியாளர்கள் என்பதை விட தூய உள்ளம் கொண்ட பணியாளர்கள் என்பதே சரி.

நமது லட்சிய வழியில் ஒரு சில இடர்பாடுகள் இருப்பதை நான் மறுக்கவில்லை. ஏதோ ஒரு சம்பவம் நடந்தால் இதுதான் பெரியார் மன்னா என கேள்வி எழுப்புகின்றனர். உங்கள்மதவெறி, சாதி வெறி தமிழ்நாட்டு மண்ணில் ஒருபோதும் வெற்றி பெறாது. மதவெறி சாதிவெறி சக்திகளின் எண்ணம் இந்த மண்ணில் நான் இருக்கும் வரை நிறைவேறாது. சமூகத்தை பிளவுபடுத்தும் சக்திகளை அம்பலப்படுத்துவோம்” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

விழாவில் 128 பயனாளிகளுக்கு கடனுதவிக்கான ஆணைகளையும், 100 தூய்மைப் பணியாளர்களுக்கு சுகாதார அட்டைகளையும், 30 நரிக்குறவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்டப் பகுதியில் வீடுகள் கட்டுவதற்கான ஆணைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

மேலும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தூய்மைப் பணியாளர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்களுக்கு 213 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்கள் வழங்கிடும் முதற்கட்டமாக 100 நவீன கழிவுநீர் அகற்றும் வாகனங்களையும் வழங்கினார்.

From around the web