புயல் அரசியலும் காமெடி அரசியலும்!! ஒன்று திரள்கிறதா எதிர்க்கட்சிகள்?
ஃபெஞ்சல் புயல் சென்னையைத் தாக்கும் என்று எதிர்ப்பார்த்த நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி உள்ளிட்ட வட மாவட்டங்களைப் பதம் பார்த்து விட்டது.
விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத மழை அளவு பதிவாகியுள்ளது. மழை வெள்ளத்துடன் சாத்தனூர் அணையிலிருந்தும் வெள்ளநீர் திறந்து விடப்பட்டதால் பெருமளவில் வீடுகள், கால்நடைகள், பயிர்கள் பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெள்ளப்பாதிப்புகளைப் பார்வையிட்டு நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். மாவட்ட அமைச்சர்கள் பாதிப்படைந்த இடங்களில் நிவாரணப்பணிகளை கண்காணித்து வருகிறார்கள். அரசு நிர்வாகம் திறம்பட செயல்பட்டு வருகிறது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டியுள்ளார்.
எதிரணியில் சாத்தனூர் அணை திறப்பு குறித்து பொதுமக்களுக்கு தெரியப்படுத்தவில்லை என்பதால் பெருமளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செம்பரம்பாக்கம் திறக்கப்பட்டது போல் சாத்தனூர் திறக்கப்படவில்லை, பல முறை முன்னறிவுப்பு செய்து தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களை வெளியேற்றி விட்டே அணை திறக்கப்பட்டது என ஆதாரத்துடன் திமுகவினர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர். பொதுமக்களும், தங்கள் வீடுகளிலேயே வந்து தகவல் தெரிவித்ததை செய்தி ஊடகங்களில் தெரிவித்துள்ளனர். திருவண்ணாமலையில் மண் சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவத்தினால் முதலமைச்சர் ஸ்டாலின் பெரும் வருத்தத்துடன் இருப்பதாக செய்திகள் வந்துள்ளது. இதைத் தவிர வேறு உயிரழப்புகள் பற்றிய தகவல்கள் ஏதும் வரவில்லை.
இயற்கை சீற்றத்தின் போது பொருள் இழப்புகள் தவிர்க்க இயலாதது, உயிரிழப்புகளை தவிர்த்து மக்களைக் காப்பாற்ற வேண்டியது தான் அரசின் தலையாயப் பொறுப்பு, அதைத் திறம்பட அரசு செய்துள்ளது என்பது திமுக தரப்பினரின் கூற்று. செம்பரம்பாக்கம் திறக்கப்பட்ட போது அரசு தரப்பிலேயே வெளியான உயிரிழப்புகளை எண்ணிப்பார்க்க வேண்டும் என்று அவர்கள் நினைவூட்டுகிறார்கள்.
ஆனால், திமுக அரசு எந்த வித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என்பது எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டு. பாமக தலைவர்கள் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், தேமுதிக பிரேமலதா விஜயகாந்த், பாஜக அண்ணாமலை என எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் கருத்துக்களையே பேசி வருகின்றனர். ஃபெஞ்சல் புயல் இவர்கள் அனைவரையும் ஓரணியில் கொண்டு சேர்க்கிறதா என்ற ஆச்சரியம் ஏற்படுகிறது.
இந்த பரப்பரப்புகளுக்கும் எனக்கும் சம்மந்தமே இல்லை என்பது போல் புதிய கட்சியான த.வெ.க தலைவர் நடிகர் விஜய், பாதிக்கப்பட்டவர்களை பனையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து வெள்ள நிவாரணப் பொருட்களை வழங்கியது புதிய சர்ச்சையைத் தொடங்கி வைத்துள்ளது. இது என்ன பாலிட்டிக்ஸ் ஃப்ரம் ஹோம்? என்று காமெடி செய்யும் அளவுக்கு விஜய்யின் செயல் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
ஃபெஞ்சல் புயல் ஓய்ந்தாலும் தமிழ்நாட்டில் அரசியல் புயல் அடிக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது.