பள்ளி பேருந்தில் திடீர் தீ விபத்து.. சிதம்பரம் அருகே பரபரப்பு!

சிதம்பரம் அருகே சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வேனில் தீ பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அடுத்துள்ள துணி சரமேடு பகுதியில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு பரங்கிப்பேட்டை, பி.முட்லூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மாணவர்கள் வந்து செல்கிறார்கள். மாணவர்களை அழைத்துவர தனியார் பள்ளி சார்பில் பேருந்து, வேன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று காலை பரங்கிப்பேட்டையில் இருந்து 30 மாணவர்களை ஏற்றிக்கொண்டு மினிபேருந்து சென்று கொண்டிருந்தது. இதனை ஓட்டுநர் முருகன் ஓட்டி சென்றார். இந்த பேருந்து பி.முட்லூர் எம்.ஜி.ஆர்.சிலை அருகே வந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.
உடனே மினிபேருந்தில் இருந்த 30 மாணவர்களும் கீழே இறக்கிவிடப்பட்டனர். இதனால் அவர்கள் காயமின்றி தப்பினார்கள். இதுகுறித்து பரங்கிப்பேட்டை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அதிகாரி ஜெயக்குமார், சிறப்பு நிலைய அலுவலர் முருகதாஸ், நரேன், தீயணைப்பு வீரர்கள் செல்வம், குமார், பிரசாந்த் உள்ளிட்டோர் அங்கு விரைந்து வந்தனர்.
பள்ளி பேருந்தில் திடீர் ‘தீ’.. மாணவர்களின் நிலை என்ன ?#Cuddalore #schoolvan #fire pic.twitter.com/pBmqgMUfgK
— A1 (@Rukmang30340218) October 26, 2023
அவர்கள் மினி பேருந்தில் பற்றிய தீயை அரை மணிநேரம் போராடி அணைத்தனர். ஆனாலும் மினிபேருந்து முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. பேட்டரியில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக இந்த தீவிபத்து நடந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.