காலையில் வெறும் வயிற்றில் புதினா எலுமிச்சை நீரை குடித்தால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?
புதினா இலைகளை நாம் பெரும்பாலும் சமைக்கும் உணவுகளில் மணமூட்டுவதற்காகப் பயன்படுத்துகிறோம். முன்னொரு காலத்தில் தமிழ்நாட்டில் பிரியாணி பரிமாறும் போது புதினா துவையலும் இடம்பெறும். தோசையுடன் தொட்டு சாப்பிட புதினா சட்னி, மதிய வேளைக்கு புதினா சாதனம் என பல வகைகளில் புதினா நமது உணவுமுறையில் இடம்பெற்றிருந்து. ஆனால் புதினாவை குடிக்கும் தண்ணீரில் போட்டு அதனுடன் லெமன் மற்றும் நெல்லிக்காயும் போட்டு குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். இது உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதில் கலோரிகள் இல்லை. புதினா சாப்பிடுவதால் செரிமானம் ஆரோக்கியமாக இருக்கும்.
இப்போது காலையில் வெறும் வயிற்றில் புதினா நீரை குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம். பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ, சி, தயாமின், கால்சியம் என பல வகையான சத்துக்கள் புதினாவில் உள்ளன. மேலும், இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி-மைக்ரோபியல் பண்புகள் நிறைந்துள்ளன. குளிர்ச்சித் தன்மை இருப்பதால் கோடைக்காலத்தில் இதை அதிகம் பயன்படுத்த வேண்டும். மழைக்காலத்திலும் இந்த தண்னீரை குடிக்கலாம். இது உடலுக்கு குளிர்ச்சி தரும்.
அஜீரணம் செய்ய உதவும்
புதினா வயிற்றுக்கு ஆரோக்கியமானது. இது அஜீரணம் மற்றும் வாயு பிரச்சனையை நீக்குகிறது. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால் புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும். இது வீக்கம், அஜீரணம், வாயு மற்றும் பிற பிரச்சனைகளை நீக்குகிறது.
உடல் நச்சுக்களை நீக்க
எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் நிறைந்துள்ளது. இது என்சைம் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், கல்லீரலைத் தூண்டுகிறது. எலுமிச்சை ஒரு சிறந்த இயற்கையான நச்சு நீக்கியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியத்தை ஊக்குவிக்கிறது. தொடர்ந்து புதினா லெமன் வாட்டரை உட்கொள்வது உடல் அமைப்பைச் சுத்தப்படுத்தி, உடலைச் சிறப்பாக செயல்பட வைக்கிறது.
உடலில் நீர் சத்து இருக்கும்
நமது உடல் எப்போதுமே நீர்ச்சத்துடன் இருக்க வேண்டுமானால் புதினா தண்ணீரைக் குடிக்கலாம். இந்த சாறு கோடையில் மிகவும் ஆரோக்கியமானது. சூரிய ஒளியில் இருந்து வீட்டிற்கு வந்த பிறகு இந்த ஆரோக்கியமான பானத்தை குடிக்கலாம். மழைக்காலத்திலும் உடல் சூடாக இருக்கும். மழைக்கால உஷ்ணத்தை தவிர்க்க இதை பருகலாம்.
உடல் எடை குறையும்
புதினாவில் கலோரிகள் குறைவாக இருப்பதால், உடல் எடை அதிகரிக்காது. புதினா தண்ணீர் குடிப்பது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது. உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு, இந்த புதினா நீர் அவர்களின் எடை இழப்பு பயணத்தில் பயனுள்ளதாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி
புதினா, எலுமிச்சை இரண்டிலுமே வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இதில் உள்ள வைட்டமின் சி சத்துக்கள் உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், செல் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகிறது. புதினா தண்ணீரை தொடர்ந்து குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. வைட்டமின் சி ஒரு வகை ஆக்ஸிஜனேற்றியாக இருப்பதால், புதினா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, பல நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கிறது. இந்த ஆரோக்கியமான பானத்தை உட்கொள்வதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.
மேலும் வாந்தி அல்லது குமட்டல் இருந்தால் புதினா இலைகளை சாப்பிடுங்கள் அல்லது புதினா சாற்றை தண்ணீரில் கலந்து குடிக்கவும். அப்படி குடிப்பதினால் குமட்டல், வாந்தி போன்றவற்றில் இருந்து விடுபடலாம்.
புதினா தண்ணீர் செய்வது எப்படி?
ஒரே இரவில் ஒரு பாட்டில் தண்ணீரில் 8-10 புதினா இலைகள் மற்றும் ஒரு எலுமிச்சை துண்டை சேர்க்கவும். காலையில், இந்த இரண்டின் சுவை மற்றும் பண்புகள் தண்ணீரில் ஒன்றிணைந்துவிடும். இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும். விருப்பப்பட்டால் புதினாவை மிக்ஸியில் அரைத்து சாறு எடுக்கலாம். ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்தும் எடுத்துக் கொள்ளலாம். எலுமிச்சை சாறு, கருப்பு உப்பு போன்றவற்றையும் சேர்த்து குடித்தால் சுவையாக இருக்கும்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)