காலையில் சீரக நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?

 
Jeeragam water

நம் வீட்டு சமயலறையில் அஞ்சறைப்பெட்டி நிச்சயமாக இருக்கும். அதில் இருக்கும் எல்லா பொருட்களுமே சமையலின் சுவைக்காக சேர்க்கப்படுவது மட்டுமில்லாமல் பல்வேறு உடல் நன்மைகளுக்காகவும் பயன்படக் கூடியவையாகும். நமது முன்னோர்கள் உணவையே மருந்தாகி தமது நோய்களை நீக்கி நூறாண்டு வாழ்ந்தனர். அத்தகைய உணவுகளை நம்மிடையே விட்டு விட்டும் சென்றிருக்கின்றனர். நாம் அதை மறந்து நமது நாக்கின் சுவைக்கேற்ப நாம் பல சுவையூட்டிகளை உணவில் சேர்த்து அதன் பக்க விளைவுகளுக்காக பல ரசாயன மருந்துகளை உபயோகித்து கொண்டிருக்கிறோம். 

உணவே மருந்து என்பது காலப்போக்கில் மருந்தே உணவு என்று மாற்றம் பெற்றுள்ளதை நாம் மறுப்பதற்கில்லை. நமது வீட்டு அஞ்சறைப்பெட்டியில் இருக்கும் சீரகத்தின் பயன் பாட்டை பற்றி இப்போது காணலாம். சீரகம் என்ற பெயரே அதன் தன்மையை விளக்குகிறது. அது நம் அகத்தை (உட்புறத்தை) சீராக்குவதால் அதன் பெயர் சீரகம்.

Cumin

சீரகத்தை உணவில் சேர்ப்பதால் அதன் சுவை கூடுவதோடு உடலுக்கும் வலு சேர்க்கிறது. 1 கப் நீரில்1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து கொதிக்க வைத்து அந்த நீரை அருந்துவதால் அது பல உடல் உபாதைகளை நீக்குகிறது. வெறும் வயிற்றில் சில பானங்களை அருந்தும்போது சில வயிற்று கோளாறுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இதற்கிடையில் வெறும் வயிற்றில் குடிப்பதற்கு இது வெகு சிறந்த பானம் ஆகும்.

உணவு செரிமானம்: 

சீரகம் உணவு செரிமானத்திற்கு உதவுகிறது. காலையில் ஒரு டம்ளர் சீரக நீர் அருந்துவதால் கார்போஹைட்ரேட், குளுக்கோஸ் மற்றும் கொழுப்புகளை உடைக்க உதவும் என்சைம்கள் உற்பத்தியை சீரகம் தூண்டுகிறது. இது உங்கள் வளர்சிதை வளர்ச்சியை அதிகரிக்கிறது மற்றும் வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாய்வு போன்ற பிற அஜீரண பிரச்சனைகளை தடுக்கிறது.

ரத்த சோகைக்கு சிகிச்சை: 

சீரகத்தில் அதிகமான இரும்பு சத்து இருப்பதால் இரத்த சோகை நோயாளிகளுக்கு இது ஒரு உகந்த மருந்து. சரியான அளவு இரும்பு சத்து உடலில் இல்லாமல் இருக்கும்போது உடலுக்கு தேவையான சிவப்பு இரத்த அணுக்களின் உற்பத்தி குறைகிறது இதனால் ஆக்சிஜென் ஓட்டத்தில் இடையூறு ஏற்படுகிறது. சீரக நீரை தொடர்ந்து அருந்துவதால் இந்த நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.

digestive

நச்சுகளை அகற்ற உதவுகிறது: 

சீரக நீரில் ஆக்சிஜனேற்ற சக்தி அதிகமாக உள்ளது. அது உடலில் இருந்து கிருமிகளை வெளியேற்றுகிறது. இதன் மூலம் உள்ளுறுப்புகள் ஆரோக்கியமாக செயலாற்றுகிறது. குறிப்பாக இது குடல் இயக்கத்திற்கு மிகுந்த பயன் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி:

சீரகத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இதனால் நோயெதிர்ப்பு மண்டலம் சீராக பணியாற்றுகிறது. 1 டம்பளர் சீரக நீரில் ஒரு நாளுக்கு பரிந்துரைக்க பட்ட இரும்பு சத்து உட்கொள்ளலில் 7% பூர்த்தியாகிறது. வைட்டமின் ஏ மற்றும் சி இந்த நீரில் காணப்படுகிறது. இது உடலை பல தொற்றுகளில் இருந்து பாதுகாக்கிறது.

சுவாச மண்டலத்தை சீராக்குகிறது: 

1 டம்பளர் சீரக நீர் குடிப்பது, மார்பில் சளி நீர்த்துப்போகவும் உதவுகிறது. அதன் ஆன்டிசெப்டிக் பண்புகள் சளி மற்றும் இருமல் ஏற்படுத்தும் நுண்ணுயிரிகளை கொல்ல உதவும். இதன் மூலம் சுவாசமண்டலம் சீராக செயல்பட உதவுகிறது.

Respiratory

தூக்கத்தின் தரத்தை அதிகரிக்கிறது: 

சீரக நீர் அருந்துவதால் தூக்கமின்மை என்னும் நோயை நம்மால் அதிக அளவில் குணப்படுத்த முடியும். நீங்கள் தூங்குவதற்கு விரைவாக உதவுவது மட்டுமல்லாமல், நீங்கள் தூக்கத்தின் சிறந்த தரத்தை உறுதிசெய்ய முடியும். சீரகம் மூளையின் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. ஞாபகத்தை அதிகம் கூர்மையாக்கி கவனம் அதிகரிக்கவும் உதவுகிறது.

தெளிவான சருமம்: 

சீரகத்தில் நார்சத்து அதிகமாக இருக்கிறது. அதனால் உடலின் நச்சுத்தன்மையை அகற்றி உடலை மென்மையாக மாற்ற உதவுகிறது. இதன் மூலம் சருமம் இயற்கையாக பளபளப்புடன் இருக்கிறது. முகப்பரு சிகிச்சைக்கும் இது சிறந்த வழியாகும். இதில் இருக்கும் ஆக்ஸிஜனேற்ற தன்மையால் சிறு வயதிலேயே வயது முதிர்ந்த தோற்றம் உருவாவதை தடுக்கும். நாம் உட்கொள்ளும் உணவில் இருக்கும் சத்துகளை உறிஞ்சுவதற்கு ஏற்ற சக்தியை சருமத்திற்கு கொடுப்பதும் சீரகத்தின் பயனாகும்.

From around the web