தென்னிந்தியாவின் பனிப்பொழிவு கிடைக்கிற ஒரே இடம் இது தான்.. குட்டி ட்ரிப் அடிக்க ரெடியா?

 
lambasingi

பனிப்பொழிவு என்றாலே காஷ்மீர், சிம்லா, குலு, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் தென்னிந்தியாவிலும் வருடத்திற்கு ஒரு முறை நம்மால் பனிப்பொழிவை பார்க்க முடியும். அதுவும் சென்னையிலிருந்து 7 மணி நேர பயண தூரத்தில் ஆந்திராவில் அமைந்திருக்கும் அழகிய இடத்தில்! 2,702 அடி உயரத்தில் அமைந்துள்ள கண்கவர் மலைவாசஸ்தலமான லம்பாசிங்கி குளிர்காலத்தில் அடிக்கடி பனிப்பொழிவைப் பெறுகிறது.

லம்பாசிங்கி, விசாகப்பட்டினத்தின் அரக்கு பள்ளத்தாக்கின் சிந்தப்பள்ளி பகுதியில் கடல் மட்டத்திலிருந்து 1025 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள ஒரு மூடுபனி மலைவாசஸ்தலம் ஆகும். இந்த இடம் கொர்ரா பயலு என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே செல்கிறது. அப்படி வெப்பநிலை குறையும் போது காணக்கிடைக்காத அரிய காட்சிகளை எல்லாம் நீங்கள் கண்டு மகிழ்வீர்கள்.

lambasingi

வினோதமான பள்ளத்தாக்குகள் மற்றும் குளிர்ச்சியான வெப்பநிலையுடன், லம்பாசிங்கி தென் பிராந்தியத்தில் பனிப்பொழிவைக் காணும் ஒரே இடமாக உள்ளதால் இது தென்னிந்தியாவின் காஷ்மீர் என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்டு முழுவதும், இந்த சிறிய கிராமம் ஒரு ரம்மியமான வானிலையுடன் காணப்படுகிறது. ஆனால் குளிர்காலம் வந்தவுடன் லம்பாசிங்கியின் வெப்பநிலை பூஜ்ஜிய டிகிரி செல்சியஸாகக் குறைந்து பனிப்பொழிவை எதிர்கொள்ளுகிறது.

அழகிய பள்ளத்தாக்குகள், குளிர்ச்சியான வெப்பநிலையுடன் இணைந்த இயற்கை அழகு ஆகியவற்றால் நிரம்பிய லம்பாசிங்கி, ஒரு சரியான சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலமாக நம்மை வரவேற்கிறது. இந்த மலைவாசஸ்தலம் குறைந்த மக்கள்தொகை கொண்டதாக இருந்தாலும், மிளகு மற்றும் காபி தோட்டங்களில் ஈடுபடும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின சமூகத்தின் தாயகமாக இது உள்ளது. ஆகையால் தனிமைத் தேடி வருபவர்களுக்கும், ஓய்வெடுக்க வருபவர்களுக்கும் இது எல்லையில்லாத மகிழ்ச்சியை தருகிறது.

வெறுமனே பனிப்பொழிவை மட்டுமல்ல லம்பாசிங்கியில் சுற்றிப் பார்ப்பதற்கும் லம்பாசிங்கி வியூபாயின்ட், தஜங்கி ரிசர்வாயர், கொத்தப்பள்ளி நீர்வீழ்ச்சி, சூசன் கார்டன்,ஏரவரம் நீர்வீழ்ச்சி, அன்னாவரம், அரக்கு பள்ளத்தாக்கு என ஏராளமான அழகிய இடங்கள் உள்ளன.

lambasingi

இந்த இடத்திற்கு ஆண்டு முழுவதும் செல்லலாம். அனைத்து காலத்திலும் குளுகுளு ஸ்பாட்டாகத்தான் இது இருக்கும். ஆனால் நீங்கள் பனிப்பொழிவை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் நவம்பர் - ஜனவரி மாதங்களில் செல்ல வேண்டும். அதற்கு பின் பனிப்பொழிவு இருக்காது.

லம்பாசிங்கி கிராமத்திற்கு விசாகப்பட்டினத்தில் இருந்து அரசு பொது பேருந்துகள் அதிகமாகவே இயக்கப்படுகின்றன. அது போக தனியார் டாக்சி அல்லது கேப் மூலமாகவும் 110 கிமீ பயணித்து கிராமத்தை அடையலாம். அதோடு விசாகப்பட்டினத்தில் இருந்து லம்பாசிங்கிக்கு அரசு பொது பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. நீங்கள் அப்படியும் செல்லலாம். ஆனால் எது எப்படியோ இந்த வருடம் இந்த குட்டி காஷ்மீரில் பனிப்பொழிவை பார்க்க ரெடி ஆகிடுங்க!

From around the web