உணவு சாப்பிட்ட பிறகு ஏற்படும் நெஞ்சு எரிச்சலுக்கு இதுதான் காரணம்.. தவிர்க்கும் வழிகள் இதோ..!

பொதுவாக நெஞ்செரிச்சல் உணவுப் பழக்கவழக்கங்களால் ஏற்படுகிறது. ஏனெனில் சரியாக உண்ணாமல் இருப்பதால், இரைப்பையில் உணவை செரிக்க உதவும் அமிலமானது தேங்கி, வயிற்றில் எரிச்சலை உண்டாக்கும். மேலும் அவை நீடித்தால், அந்த அமிலமானது உணவுக்குழல் வழியாக மேலே சென்று நெஞ்சில் எரிச்சலை உண்டாக்குகின்றன.
எதுவாயினும் அதை சரி செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் அது நாள் முழுவதும் தொந்தரவாகவே இருக்கும். நீங்கள் எப்போதாவது அல்லாமல் அடிக்கடி இந்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்கள் எனில் இதை கவனித்தில் கொள்வது அவசியம். ஏன் என்பதை இன்னும் விரிவாக பார்க்கலாம்.
இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD):
இதை நாள்பட்ட நிலையாக கருதுகின்றனர். இந்நிலையில் உணவு அமிலமானது மீண்டும் உணவுக்குழாய்க்கு திரும்புவதால் எரிச்சல் உணர்வு இருக்கிறது. இது பலருக்கும் உணவுக்கு பின் வரக்கூடிய பிரச்சனை. உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் நெஞ்சில் எரிச்சலாக இருக்கும். பின் வாய் அல்லது தொண்டை வரை காரமான திரவம் வந்து செல்லும். இதனால் நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வாந்தி வரும் உணர்வு இருக்கும்.
ஹையாடல் குடலிறக்கம்:
குடலிறக்க பிரச்சனையில் வயிறு நெஞ்சுக்குழிக்குள் உள்ள diaphragm தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனால் ஒவ்வொரி உணவுக்கு பின்பும் நீங்கள் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவீர்கள். இது வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய பிரச்சனைதான். சில பிரச்சனைகளில் அறுவை சிகிச்சைகூட செய்ய நேரலாம்.
அமிலம் மற்றும் காரம் நிறைந்த உணவுகள்:
காரமான உணவுகள் பொதுவாகவே நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதோடு சுவைக்காக அதில சேர்க்கப்படும் சில மசாலாக்கள் அல்லது உணவுப்பொருட்கள் ஆசிட் ரிஃப்ளெக்ஷனை உண்டாக்கலாம். இதை சரி செய்ய பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்கலாம்.
இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்?
மாத்திரையை காட்டிலும் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வது பக்கவிளைவுகளற்றது. அதோடு சில உடல் செயல்பாடுகள் மூலமும் உடனடி நிவாரணம் பெறலாம். அதேசமயம் நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை அனுபவிக்கிறீர்கள் எனில் மருத்துவரை அணுகுவதே நல்லது.
உணவுக்கு பின் படுத்தல்:
உணவு உண்ட பிறகு சாய்ந்து படுப்பது, தூங்குவது மிகவும் தவறு. இது செரிமான வேலையை பாதிக்கும். வயிற்று மந்தம் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தரலாம்.
1,000 அடிகளாவது நடக்கலாம்:
உணவுக்கு பின் உடனே அல்லாமல் 5 நிமிடங்கள் கழித்து வாக்கிங் செல்லலாம். இதனால் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதோடு உணவுக்கு பின் வரும் சோர்வு நீங்கி ஃபிரெஷாக உணர்வீர்கள்.
வஜ்ராசனா நிலை:
உங்களால் நடக்க முடியவில்லை எனில் வஜ்ராசனா நிலையில் 5 நிமிடங்கள் அமரலாம். இதை உணவுக்கு பின் செய்ய வேண்டும். அதேசமயம் நல்ல ஹெவி மீல் எடுத்துக்கொண்ட பின் இதை செய்யக்கூடாது.