காற்றுப் பிரிதல் பிரச்சனையா? இதோ தீர்வு!!
அன்றாடம் ஆயிரம் பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் கூட இந்த காற்றுப் பிரிதல் பிரச்சனைன்னா கொஞ்சம் ஆடித்தான் போறாங்க. அதென்ன காற்றுப் பிரிதல்? அதாங்க வாயுப் பிரச்சனை.
உடலில் 200 மி.லிட்டர் அளவு வரைக்கும் காற்று இருந்தால் எந்தத் தொந்தரவும் இருக்காது. அது கூடும் போது வாய் வழியாக ஏப்பமாக வெளியேறலாம் அல்லது பின்பக்கம் வழியாக சத்தத்துடனோ அல்லது சத்தமில்லாமலோ வெளியேறலாம். வாய் வழியாக வெளியேறும் போது கடைசியாக சாப்பிட்ட உணவின் வாசம் வெளியே வரும். அதே போல் பின்னால் வெளியேறும் போது மலக்குடல் கடந்து வருவதால் அந்தக் கழிவு வாசமும் சேர்ந்து வரும். இது தான் பெரும் பிரச்சனை அல்லவா!
ஒருவேளை காற்று மேல்நோக்கி அல்லது கீழ்நோக்கி வெளியேறவில்லை என்றால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து முதுகுப் பிடிப்பு, நெஞ்சு வலி, விலாப் பக்கத்தில் வலி, தலைவலி என வேறு பிரச்சனைகளை உருவாக்குகிறது.
என்ன செய்யலாம்? நேரத்திற்கு உணவு எடுத்துக் கொள்வதன் மூலமும், நாளொன்றுக்கு 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிப்பதன் மூலமும் கூடுதல் காற்று உடலுக்குள் உருவாகுவதைத் தடுக்கலாம். ஓமத்தண்ணீர், சீரகத்தண்ணீர் குடித்தால் வாயு உருவாகுவதை தடுக்க முடியும்.
வறுத்த பெருங்காயத்தூள், சீரகம், இஞ்சி, கறிவேப்பிலை ஆகியவற்றை மோரில் கலந்து குடிக்கலாம். சீரகம், ஓமம், பெருங்காயம், மிளகு, சுக்கு, கறிவேப்பிலை, மணத்தக்காளி வற்றல் ஆகியவைகளை வறுத்து பொடி செய்து சோறுடன் நெய் சேர்த்து சாப்பிட்டால் வாயுப் பிரச்சனை அதாவது காற்றுப் பிரிதல் பிரச்சனை நீங்கும்.
நமக்கு வயிற்றில் காற்றுப் பிரச்சனை இருக்கு என்று தெரிந்து கொண்டவர்கள், மொச்சை, பீன்ஸ், பட்டாணி, உருளைக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பாலில் செய்த இனிப்புகள், வெங்காயம், காலிபிளவர், முட்டைக்கோஸ் ஆகியவற்றை தவிர்ப்பது அல்லது குறைத்துக் கொள்வது நல்லது.