மாரடைப்பு Vs அசிடிட்டி.. அறிகுறிகள் என்னென்ன? கண்டறிவது எப்படி..?

 
Heart attack

நோய்களுக்கு பஞ்சமில்லாத இன்றைய காலகட்டத்தில், பல விதமான உடல் சுகவீனங்களுக்கு நாம் ஆளாகிறோம். இதிலே பல வகைகள் இருந்தாலும், அன்றாடம் நாம் சந்திக்கும் சுகவீனங்கள் சில உள்ளது. அதற்கு முக்கிய காரணமாக இருப்பது நம்முடைய மோசமான வாழ்க்கை முறை, மாசுப்பட்ட சுற்றுப்புறச் சூழல், சுகாதாரமற்ற உணவுகள் போன்றவைகளே.

நோய்க்கான அறிகுறிகளை கண்டுபிடிக்க முடியாமல் இருப்பதே இதயம் சார்ந்த நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதில் இருக்கக்கூடிய மிகப்பெரிய தடையாக கருதப்படுகிறது. ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அறிகுறிகளை ஒரு சிலர் அசிடிட்டி அல்லது கேஸ்ட்ரிக் பிரச்சனையாக இருக்கலாம் என எண்ணிக்கொண்டு மருத்துவரின் உதவியை நாடாமல், கை வைத்தியம் செய்து, மருத்துவமனைக்கு செல்வதில் தாமதத்தை ஏற்படுத்துகின்றனர்.

Acidity

இது பல்வேறு பிற காரணிகளுடன் இணைந்து ஒரு ஆண்டுக்கு 18 மில்லியன் நபர்கள் இதயம் சார்ந்த நோய்கள் காரணமாக இறந்து போகின்றனர். நெஞ்சில் ஒருவித எரிச்சல் உணர்வை அனுபவிக்கும் பொழுது உடனடியாக நாம் கடைசியாக சாப்பிட்ட உணவுடன் அதனை தொடர்புப்படுத்தி பார்ப்பது வழக்கமாகிவிட்டது. ஆனால் அதற்கு வேறு காரணமாக இருந்தால் என்ன செய்வது?

ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்கும் அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக்: 

அசிடிட்டி என்பது நமது நெஞ்சு பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்தும். ஹார்ட் அட்டாக் சமயத்திலும் இதே போன்ற உணர்வு ஏற்படும். இந்த இரண்டு நோய்களுக்கான அறிகுறிகளில் ஒன்று தவிர்க்க கூடியதாகவும், மற்றொன்று மிகவும் மோசமானதாகவும் இருப்பதால் இவை இரண்டிற்கான வேறுபாட்டை நம்மால் புரிந்து கொள்ள முடியாமல் போகிறது. 

அசிடிட்டியை பொருத்தவரை நெஞ்சு பகுதியில் ஏற்படுகின்ற அசௌகரியம் குறிப்பாக மேல் வயிற்றில் எரிச்சல் உணர்வு ஏற்படும். அதன் பிறகு வாயில் புளிப்பு அல்லது வழக்கத்திற்கு மாறான கசப்பு சுவை உண்டாகும். மேலும் அசிடிட்டி பிரச்சினையில் இறுதியாக நம் வயிற்றில் இருக்கக்கூடிய உணவில் சிறிதளவு மீண்டும் வாய்க்கு வந்து சேரும்.

Heart attack

இதுவே ஹார்ட் அட்டாக்கை பொறுத்தவரை நெஞ்சை யாரோ பிழிவது போல ஒரு வித வலி அல்லது நெஞ்சு பகுதியில் அதிக அழுத்தத்துடன் கூடிய வலி உண்டாகும். நெஞ்சு பகுதியில் தொடங்கிய வலியானது கழுத்து, தாடை மற்றும் முதுகு போன்றவற்றிற்கு பரவுவது ஹார்ட் அட்டாக்கின் முக்கியமான ஒரு அறிகுறி. வயிறு வலி, மூச்சு விடுவதில் சிரமம், குளிர்ந்த வியர்வை மற்றும் மயக்கம் போன்றவை ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான பிற அறிகுறிகள். இதயத்திற்கு போதுமான ரத்த ஓட்டம் கிடைக்காததால் நெஞ்சில் ஒருவித இறுக்கம் மற்றும் வலி ஏற்படுவது ஆஞ்சினா என்று அழைக்கப்படுகிறது. உடற்பயிற்சிக்கு பிறகு ஏற்படக்கூடிய நெஞ்சு வலி பெரும்பாலும் ஹார்ட் அட்டாக் காரணமாக ஏற்படலாம்.

ஹார்ட் அட்டாக்கை போல தோன்றக்கூடிய பிற நெஞ்சு அசௌகரியங்கள் : அசிடிட்டி தவிர உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய ஒரு வித தசை சுளுக்கு காரணமாகவும் நெஞ்சு பகுதியில் வலி ஏற்படலாம். பித்தப்பையில் நோய்களை அனுபவித்து வரும் நபர்களுக்கு ஏற்படும் வலி ஹார்ட் அட்டாக் போன்ற உணர்வை கொடுக்கலாம்.

Heart attack

எப்பொழுது விரைவாக செயல்பட வேண்டும்? 

உடற்பயிற்சி அல்லது மன அழுத்தம் ஏற்பட்ட பிறகு உங்களுக்கு நெஞ்சு பகுதியில் வலி ஏற்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நெஞ்சில் தொடங்கிய வலியானது கைகள், வாய் மற்றும் முதுகு பகுதிக்கு நகரும் பொழுது நிச்சயமாக உங்களுக்கு மருத்துவ உதவி தேவை. இதைத்தவிர உங்களுக்கு ஏற்பட்டுள்ள வலி என்ன என்பதை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உங்கள் சந்தேகத்தை தெளிவு படுத்தி கொள்ளுங்கள்.

நெஞ்சு வலி ஏற்படும் பொழுது இது அசிடிட்டியாக தான் இருக்கும் என்று நீங்களாக ஒரு முடிவுக்கு வராமல் மருத்துவரை அணுகி ECG மற்றும் கார்டியோ கன்சல்டேஷன் பெறுவது கட்டாயமாக பரிந்துரைக்கப்படுகிறது. அசிடிட்டி மற்றும் ஹார்ட் அட்டாக் ஆகிய இரண்டிற்குமான அறிகுறிகள் இடையே ஒரு மெல்லிய கோடு மட்டுமே உள்ளது. இவற்றை முடிந்த அளவு புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருக்கும் பட்சத்தில் அதனை தெளிவுப்படுத்திக்கொள்ள மருத்துவரை அணுகுவதில் தப்பு ஏதும் கிடையாது.

From around the web