தினமும் கொய்யா இலை டீ.. உங்களுக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்!!

 
Guava

பலருக்கும் கொய்யா பழத்தின் நன்மைகளைப் பற்றி தான் தெரியும். ஆனால் கொய்யா பழத்தின் இலையில் நிறைந்துள்ள மருத்துவ குணத்தால், பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காணலாம். ஏனெனில் கொய்யா இலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ஆன்டி-பாக்டீரியல் தன்மை மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி தன்மை போன்றவைகள் நிறைந்துள்ளது. மேலும் இதில் பாலிஃபீனால்கள், கரோட்டினாய்டுகள், ப்ளேவோனாய்டுகள் மற்றும் டானின்கள் இருப்பதால், பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது.

உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை கரைப்பது முதல், ரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருப்பது வரை கொய்யா இலைகளின் மூலமாக எண்ணற்ற பலன்களை நாம் பெற முடியும். சரி, இப்போது அந்த கொய்யா இலையின் மூலம் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.

Guava

உடல் எடை குறையும்:

உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொய்யாப்பழம் மற்றும் கொய்யா இலை ஆகியவை சிறந்த தேர்வாக அமையும். ஒரு நடுத்தர அளவிலான கொய்யா பழத்தில் 37 கலோரிகள் மட்டுமே இருக்கும். ஆனால் அதை சாப்பிடும் போது உங்களுக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படும் மற்றும் நீண்ட நேரத்திற்கு பசி ஏற்படாது. அதேபோல கொய்யா இலையை காய்ச்சி டீ போல அருந்தினால் பசி கட்டுப்படும்.

குடல் நலன் மேம்படும்:

நம் உடலில் செரிமான சக்தியை மேம்படுத்தும் திறன் கொய்யா இலைகளில் உண்டு. இதில் உள்ள எண்ணற்ற நல்ல நுண்ணுயிர்கள், உடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும். மலச்சிக்கலுக்கு நல்ல தீர்வை கொடுக்கும். அசிடிட்டி மற்றும் குடல் வாய்வு போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்பவர்கள் கொய்யா டீ அருந்தலாம். நம் செரிமான கட்டமைப்பில் உள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றவும் இது உதவியாக இருக்கும்.

Digestion

சரும அழகு மேம்படும்:

ஏதோ ஒரு காரணத்தால் சருமத்தின் அழகு பாதிக்கப்பட்டவர்கள் தினசரி கொய்யா டீ அருந்தலாம். இதில் உள்ள விட்டமின் சி மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட்ஸ்கள் சருமம் பொலிவு பெற உதவுகிறது. சருமத்தில் உள்ள இறந்த செல்களை வெளியேற்றி, புது செல்கள் உருவாக இது வழிவகை செய்யும். பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை மறையும்.

ரத்த சர்க்கரையை சீராக வைத்திருக்கும்:

ஹார்ட் அட்டாக், ஸ்ட்ரோக் போன்ற உயிர் அபாய பாதிப்புகளுக்கு சர்க்கரை நோய், அதிக கொலஸ்ட்ரால் போன்றவை தான் அடிப்படை காரணிகளாக இருக்கின்றன. ஆனால் தினசரி கொய்யா டீ அருந்தும் பட்சத்தில் உடலில் ரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும் மற்றும் கெட்ட கொழுப்புகள் கரையும்.

Diabetes

நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்:

இயற்கையாகவே உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை நீங்கள் மேம்படுத்திட வேண்டும் என்று விரும்பினால் தினசரி கொய்யா டீ அருந்தலாம் அல்லது கொய்யா இலைகளை மென்று திண்ணலாம். உடலில் உள்ள அலர்ஜிகள், கரகரப்பான தொண்டை, காயங்கள் போன்ற பல சிக்கல்களுக்கு இது நல்ல தீர்வை கொடுக்கும். உடலில் உள்ள வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களை எதிர்த்து போரிடும்.

இனப்பெருக்கத்திறன்:

குழந்தை வரம் இல்லாமல் அவதி அடையும் ஆண்களும், பெண்களும் கொய்யா இலை சாப்பிட்டு வரலாம். ஆண்களுக்கு விந்தணு தரம் மற்றும் எண்ணிக்கையை பெருக்கவும், பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படுகின்ற வலி நிவாரணியாகவும் கொய்யா இலை செயல்படுகிறது.

Guava Tea

கொய்யா டீ தயாரிப்பது எப்படி.?

ஒரு பாத்திரத்தில் 3 டம்ளர் அளவுக்கு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும். 4, 5 கொய்யா இலைகளை கழுவி தண்ணீரில் சேர்த்து லேசான சூட்டில் கொதிக்க விடவும். மூன்றில் ஒரு பங்காக தண்ணீர் வற்றிய பிறகு, இறக்கி விடவும். பின்னர் சூடு ஆறிய பிறகு அப்படியே பருகலாம் அல்லது தேன் கலந்து அருந்தலாம்.

From around the web