இந்த 10 அறிகுறிகளை அலட்சியம் செய்யாதீங்க..! புற்றுநோயாக கூட இருக்கலாம்..!

 
Cancer

எவ்வளவு தான் நவீன மருத்துவ கண்டுபிடிப்புகள் இருந்தாலும், புற்றுநோய் ஒரு உயிர்கொல்லி நோயாகவே உள்ளது. ஏனெனில் உலகில் உள்ள நோய்களிலேயே புற்றுநோயின் தாக்கத்தினால் தான் அதிக அளவு உயிரிழப்பானது ஏற்படுகிறது. இத்தகைய உயிரிழப்புக்களை தடுப்பதற்கு ஒரே வழியென்றால், ஆரம்பத்திலேயே புற்றுநோயின் அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்றாற் போல் சிகிச்சைகளை மேற்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க முடியும்.

மேலும் புற்றுநோயில் நிறைய வகைகள் உள்ளன. இவை அனைத்துமே ஒரே மாதிரியான அறிகுறிகளை கொண்டிருக்காது. ஒவ்வொரு புற்றுநோயும் ஒவ்வொருவிதமான அறிகுறிகளைக் கொண்டிருக்கும். வேண்டுமெனில் ஒருசில பொதுவான அறிகுறிகளான சோர்வு, காய்ச்சல், குறைவான இரத்தம் மற்றும் எடை குறைவு போன்றவை உள்ளன. ஆனால் ஒரு குறிப்பிட்ட புற்றுநோயை கண்டறிய, ஒரு குறிப்பிட்ட அறிகுறிகளை தெரிந்திருப்பது அவசியம்.

காரணமில்லாத உடல் எடை இழப்பு

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர். எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம். கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.

Weight Loss

அடிக்கடி காய்ச்சல்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து பரவ ஆரம்பித்தப் பிறகு இது அடிக்கடி நிகழ்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள். புற்றுநோய் அல்லது அதன் சிகிச்சைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் இது நிகழ்கிறது. பொதுவாக, காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் (leukemia) அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் (lymphoma) போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

தீவிரமான உடல் சோர்வு

ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு அறிகுறி. புற்றுநோய் பரவும்போது இது ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கலாம். லுகேமியா போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம். சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத இரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

தோலில் ஏற்படும் மாற்றங்கள்

தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாகத் தெரியும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும். இதற்கான அறிகுறிகள், சருமம் கருமையாகுதல் (hyperpigmentation), தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல் (jaundice), தோல் சிவத்தல் (erythema), அரிப்பு (pruritus), அதிகப்படியான முடி வளர்ச்சி

Cancer

மலம் அல்லது சிறுநீர் கழிக்கும் பழக்கத்தில் மாற்றங்கள்

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய்களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

ஆறாத காயங்கள்

மச்சங்கள் - குறிப்பாக வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்ச்சங்கள் புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும். ஆனால் நான்கு வாரங்களுக்கு மேல் குணமடையாத சிறிய காயங்கள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும். ஆறாத வாய்ப் புண் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். நீண்ட காலமாக ஆறாத வாயில் ஏற்படும் எந்த மாற்றமும் உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும். ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

ரத்தப்போக்கு

புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம். இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மறுபுறம், மலத்தில் இரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

கர்ப்பப்பையின் உட்பரப்பின் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம். மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். முலைக் காம்பிலிருந்து இரத்தம் தோய்ந்த கசிவு வெளிவருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

Thoart

உடலில் தடிப்பு அல்லது கட்டிகள்

பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும். இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென்மையான திசுக்களில் ஏற்படுகின்றன. தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

விழுங்குவதில் சிரமம்

தொடர்ந்து அஜீரணம் அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல்வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம். இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, அவை பெரும்பாலும் புற்றுநோயைத் தவிர வேறு காரணங்களாலும் ஏற்படுகின்றன.

தொடர் இருமல் அல்லது தொண்டை கரகரப்பு

தொடர் இருமல் நுரையீரல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது. தொண்டை கரகரப்பு குரல்வளை அல்லது தைராய்டு சுரப்பிப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

From around the web