கட்டை விரல் காயம் ஆறவில்லையா? கவனம் தேவை!!
மழைக்காலத்தில் காலில் புண்கள் ஏற்படுவது சாதாரணமாக நடக்கக்கூடியது தான். அதுவும் காலில் செருப்பு போடாமல் நடக்கும் கிராமத்து வாசிகளுக்கு சேத்துக்கடி புண்கள் எனப்படும் சேறுகளில் நடப்பதால் புண்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
பக்கத்தில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குச் சென்று மருந்து வைத்துக் கொண்டால் சாதாரண புண்கள் விரைவில் ஆறிவிடும். புண்கள் ஆறாமல் நாள் பிடித்தால் உடனடி கவனம் தேவைப்படும். உடலில் உள்ள சக்கரை அளவினால் புண்கள் ஆறுவதற்கு காலதாமதமாகும்.
புண்கள் ஆறிவிடும் என்று காத்திருக்காமல், அருகில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவமனைக்குச் சென்று சர்க்கரை அளவை சோதனை செய்ய வேண்டும். அதற்கு ஏற்றாற்போல், மருந்துகளை மருத்துவர்கள் மாற்றுவார்கள். ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் இருப்பதே இப்படி புண்கள் ஆறாமல் இருப்பதன் மூலம் தான் கண்டறியப்படுகிறது. பரிசோதனை முடிவுகளுக்குப் பின் இன்சுலீன் ஊசி போன்ற கூடுதல் மருந்து, மாத்திரை, ஊசிகள் மூலம் புண்களை மருத்துவர்கள் சரி செய்வார்கள்.
கட்டைவிரல் காயத்தை கூடுதல் கவனத்துடன் சரி செய்து விட வேண்டும். சர்க்கரை நோய் இருந்தால் கட்டை விரல் காயம் ஆறாமல், நாளடவைவில் விரலை நீக்கும் அளவுக்கு கூட மோசமாகலாம். எனவே காலில் காயம் என்றால் விரைவில் சரி செய்யவேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.