தினமும் 2 கிராம்பு சாப்பிட்டு ஒரு டம்ளர் சுடுநீர் குடிப்பதால் பெறும் நன்மைகள்!
நம் வீட்டின் சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்த ஒரு பொருள் தான் கிராம்பு. இந்த கிராம்பு சமையலில் உணவிற்கு நல்ல மணத்தை தருவதோடு, உடலில் பல அற்புதங்களை நிகழ்த்தக்கூடியது. ஆயுர்வேதத்தில் கிராம்பு பல ஆரோக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக பல் வலி, தொண்டை வலி, வயிற்று கோளாறுகளுக்கு கிராம்பு ஒரு நிவாரண பொருளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
உருவத்தில் சிறியதாக இருக்கும் கிராம்பு, காரச் சுவையைக் கொண்டது. கிராம்பில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. குறிப்பாக இதில் உள்ள யூஜினோல் என்னும் பொருள், மன அழுத்தம், வயிற்று பிரச்சனைகள், பர்கின்சன் நோய், உடல் வலி மற்றும் பலவிதமான ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கிறது. இது தவிர கிராம்பில், வைட்டமின் ஈ, வைட்டமின் சி, ஃபோலேட், ரிபோஃப்ளேவின், வைட்டமின் ஏ, தயமின், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல், அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் பண்புகளும் நிறைந்துள்ளன.
வாய்வழி ஆரோக்கியம்:
வாய்வழி ஆரோக்கிய பலன்களுக்கு கிராம்பு பெயர் போனது. நாம் ஏற்கனவே கூறியது போல கிராம்பில் நுண்ணுயிரிகள் எதிர்ப்பு பண்புகள் இருப்பதால் அது வாயில் இருக்கும் பாக்டீரியாக்களுடன் சண்டையிட்டு பற்சொத்தை மற்றும் ஈறு தொடர்பான நோய்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்கிறது. ஒரு சில வாய்வழி சிகிச்சைகள் மற்றும் ப்ராடக்டுகளில் கிராம்பு எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செரிமான ஆரோக்கியம்:
கிராம்புகள் பாரம்பரியமாக செரிமானத்தை ஊக்குவிப்பதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி, இரைப்பை குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்புகள் சாப்பிடுவதால் வாயு மற்றும் வயிற்று உப்புசம் பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
ரத்த சர்க்கரை கட்டுப்பாடு:
கிராம்புகள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஒரு சில ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன. இது ரத்த குளுக்கோஸ் அளவுகளை சீராக்கி இன்சுலின் உணர்திறனை ஊக்குவிக்கிறது. எனினும் இந்த விளைவுகளை உறுதிப்படுத்துவதற்கு இன்னும் கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது.
ஆன்டி-ஆக்சிடன்ட்கள்:
கிராம்புகளில் எக்கச்சக்கமான ஆன்டி-ஆக்சிடன்ட்கள் இருப்பதால் அது ஆக்சிடேட்டிவ் அழுத்தத்தை குறைத்து ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராடுகிறது. அதுமட்டுமல்லாமல் கிராம்பில் வலி நிவாரண பண்புகளும் உள்ளது.
மிதமான அளவுகளில் கிராம்பு சாப்பிடுவது பெரும்பாலான நபர்களுக்கு பாதுகாப்பாக கருதப்பட்டாலும் இதனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் பக்க விளைவுகள் உண்டாகும் என்பதையும் மனதில் வைத்துக் கொள்வது அவசியம். கிராம்பு எண்ணெயை அதிகப்படியாக பருகும் பொழுது அதனால் குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படலாம். எனவே கிராம்பு எண்ணெயை அதிக அளவில் சாப்பிட கூடாது.
கிராம்பு பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் நபருக்கு நபர் மாறுபடும். மேலும் ஒரு சில நபர்களில் கிராம்புகள் அலர்ஜி வினைகளை கூட உண்டாக்கலாம். கிராம்பு சாப்பிட்டதால் உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மேலும் நீங்கள் ஏதேனும் மருத்துவ நிலையினால் பாதிக்கப்பட்டிருந்தால் கிராம்பு எடுத்துக் கொள்ளும் முன்பு உங்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்றுக் கொள்ளுங்கள்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)