முதுகு வலியா.. கழுத்து வலியா.. இதை பின்பற்றினால் போதும் குட்பை சொல்லலாம்!
பல மணி நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை, அதிக துாரம் இரு சக்கர வாகன பயணம்.. விளைவு கழுத்து வலி, முதுகு வலி. உடம்பில் உள்ள நோய் எதிர்ப்பு அணுக்கள், முதுகுத் தண்டை தாக்கி, வீக்கத்தை ஏற்படுத்தும், ‘அங்கிலோசிங் ஸ்பான்டிலிடிஸ்’ கழுத்து, முதுகு வலிக்கு இன்னொரு காரணம்.. இதற்கு நம் வாழ்க்கை முறை மாற்றங்கள், உணவு முறை மாற்றங்கள் மூலம் தீர்வை காணலாம்.
மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையை தவிர, அதிக உடல் எடை, விட்டமின் டி குறைபாடு, கால்சியம் குறைபாடு, உட்கார்ந்து கொள்ளும் தோரணை ஆகியவை முதுகு கழுத்து வலிக்கான முக்கிய காரணம். உடல் உழைப்பு அல்லது உடற்பயிற்சியே இல்லாத நிலையில் தசைகள் இறுகி, கழுத்து வலி மற்றும் முதுகு வலியை ஏற்படுத்துகின்றன. முதுகு வலி தீவிரமானால், சரியாக உட்கார முடியாத நிலை கூட ஏற்படலாம்.
முதுகு கழுத்து வலிக்கான உடற்பயிற்சிகள்
முதுகு கழுத்து வலி தீர மிக முக்கியமாக கடைபிடிக்க வேண்டியது, கழுத்திற்கான பயிற்சிகள், மற்றும் முதுகு தண்டுவடத்தை வலுவாக்கும் நீட்சி பயிற்சிகள். இது போன்ற பயிற்சிகளை செய்யும்போது தசைகள் வலுவாகி, வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். முதுகு கழுத்து வலிக்கு உடற்பயிற்சி தான், நீண்ட கால நிரந்தர தீர்வை அளிக்கும் என்பதால், தகுந்த மருத்துவ ஆலோசனையுடன், உங்களுக்கான உடற்பயிற்சிகளை தவறாமல் செய்வது மிக அவசியம்.
முதுகு வலி கழுத்து வலி ஏற்படாமல் இருக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், ரெடி டு ஈட் வகை உணவுகள் ஆரோக்கியத்திற்கு எதிரி. இவற்றில் ஊட்டச்சத்து என்பது மருந்துக்கும் இல்லை. கூடுதலாக எலும்பிலிருந்து கால்சியத்தை உறிஞ்சி உடலை சல்லடையாக்கிவிடும். நீண்ட நாள் கெட்டுப் போகாமல் இருக்க இதில் சேர்க்கப்படும் சோடியம் மற்றும் பிற ரசாயனங்கள், எலும்பு ஆரோக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அதோடு அதிக அளவிலான உப்பு சேர்க்க உணவுகள், அதிக சர்க்கரை சேர்த்த உணவுகள் எலும்பு ஆரோக்கியத்தை காலி செய்து விடும். டீ காபி அதிகளவிற்கு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
முதுகு வலி கழுத்து வலி ஏற்படாமல் இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்
வலி நிவாரணத்திற்கு உணவு முறையும் அவசியம். சமச்சீரான உணவை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முதுகுத்தண்டை வலுப்படுத்தும், ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உலர் பழங்கள் குறிப்பாக, பாதாம் பருப்பு வாதமைப்பருப்பு மிக உதவும். இவற்றில் கால்சியம் வைட்டமின் ஈச்சத்தும் நிறைந்துள்ளது என்பதால் முதுகுத்தண்டை வலுப்படுத்தும். கடல் உணவுகளில் குறிப்பாக சால்மன் மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை எலும்பு அடர்த்தியை அதிகரிப்பதோடு, திசுக்களையும் வலுப்படுத்தும். எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் மட்டுமல்ல, வைட்டமின் சி யும் அவசியம். எனவே ஆரஞ்சு எலுமிச்சை போன்ற வைட்டமின் சி நிறைந்த பழங்களை தவறாமல் சேர்த்துக் கொள்ளவும்.
(பொறுப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். a1tamilnews.com இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)