அருவிபோல் சொற்கள் கொட்டி புகழ்மாலை! பொய்களென உணர்ந்த பின்னே வருத்தம்!! 
 

 
Kiss

சில வேளைகளில் நம்மிடம் சொற்கள் 
இல்லாது போகும். 
அதனால் என்ன?  
உண்மை வாழும் இடத்தில் 
பலப் பொழுதுகளில் சொற்களுக்கு
தேவை எதுவும் இல்லை. 
ஆகவே அவற்றை தேடி அலைய 
வேண்டிய அவசியம் இல்லை. 

புல்லாங்குழல் இசையில் சொற்கள் இல்லை 
இனிமை அது கூறவில்லையா? 
வாலாட்டும் நாயிடத்தில் சொற்கள் இல்லை 
அன்பு அது வெளிபடுத்தவில்லையா? 
குயில் பாட்டில் சொற்கள் இல்லை 
ஏக்கம் அது கொடுக்கவில்லையா? 
ரயில் சத்தத்தில் சொற்கள் இல்லை 
பிரிவின் சுமை அது உணர்த்தவில்லையா? 
இடி முழக்கத்தில் சொற்கள் இல்லை 
அச்சம் அது கொடுக்கவில்லையா? 
காற்றின் ஒலியில் சொற்கள் இல்லை 
இதத்தை அது உணர்த்தவில்லையா? 
குழந்தை மொழியில் சொற்கள் இல்லை 
தாயின் தேடலை அது கூறவில்லையா? 

அழுகையில் சொற்கள் இல்லை 
ஆனால் அது கூறிவிடாதா 
வலியை 
பிரிவை 
பசியை 
பாசத்தை 
ஏக்கத்தை 
பரிவை 
தேடலை ….. ? 

சொற்கள் இல்லாமலேயே 
உணர்வுகளை 
ஆழமாகவும்  
மிக அழகாகவும் கூற 
இயலாதா என்ன? 

பக்கம் அமர்ந்தால் போதாதா 
வலிகள் சட்டென்று விலகி 
ஓட   
 
ஒரு கோப்பைத் தேநீர் பகிர்ந்தால் 
போதாதா 
மனபாரம் பட்டென்று குறைந்து 
போக

நெற்றிப் பொட்டில் ஒரு முத்தம் 
தந்தால் போதாதா 
மகிழ்ச்சி தன்னால்வந்து மனம் 
நிறைய   

இதழ்கள் பூத்து சிறு புன்னகை 
செய்தால் போதாதா  
உயிர் தானாக எழுந்து ஆனந்தக் 
கூத்தாட  

கட்டிப்பிடித்து கண்ணீர் துடைத்தால் 
போதாதா 
துயரமெலாம் கடந்து வெகு தூரம் 
பறக்க 

இப்படி ஆயிரமாயிரம் சின்னச்சின்ன 
செயல்களில் உணர்வுகளைக் கூற இயலும் 
பொழுது,  

பிறருக்கு என்ன சொல்லலாம், அதை எப்படிச் சொல்லலாம் எனச் சொற்களை நாம் 
தேடித் தேடி அலைவது தேவையில்லை. 
அது அரசியல்வாதிகளின், ஆன்மீகவாதிகளின் 
பாட்டாசிரியர்களின், கதாசிரியர்களின், கவிதைக்காரர்களின் வேலை, 
மற்றும் தேவை என விட்டுவிடுவோம். 

பிறரிடமிருந்து நம்மைத் தேடி வரும் 
வெறும் சொற்களில் நாம் மயங்கி 
மதிகெட்டு சிதைவது நிறுத்த முயல்வோம். ஏனெனில் சுயச் சிந்தனை இழந்து வாழ்ந்தால் ஆட்டு மந்தைகள் போல் பின் தொடர்ந்து கசாப்பு கடையில் தான் பலிக்காடாவாக முடிவோம் 
என்பது உறுதி. 

அழுகை சொல்லாததையா 
சிரிப்பு கூறாததையா 
முறைத்தல் உணர்த்தாதையா 
தேம்பல் செப்பாததையா 
முகபாவனைகள் அறிவிக்காததையா 
செயல்கள் இயம்பாததையா 
ஏன்…. மௌனம் தெரிவிக்காததையா 
சொற்கள் வெளிப்படுத்திவிடப் போகின்றன? 
அகத்தின் அழகு முகத்தில் தெரிந்துவிடுமே. 

ஒருவரின் கண்கள் அவரின் ஆன்மாவை 
நமக்குக் காட்டும் ஜன்னல் என்றனரே   
அது எவ்வளவு உண்மை!  
அந்தக் கண்களைப் பார்த்தாலே 
போதுமே அவர் 
வலியில் உள்ளாரா 
இல்லை 
மகிழ்ச்சியாய் உள்ளாரா 
என்று. 
கோபத்தில் உள்ளாரா 
இல்லை 
குழப்பத்தில் உள்ளாரா 
என்று. 
அவரில் பொய்கள் வாழ்கின்றனவா   
இல்லை 
ஆத்மார்த்தம் துளியேனும் உண்டா  
என்று. 

ஒருவர் பார்வை சொல்லிவிடும் 
அது   
காதல் பார்வையா கருணை பார்வையா 
சோர்வுப் பார்வையா சோகப் பார்வையா 
கொடூரப் பார்வையா துரோகப் பார்வையா
அச்சுறுத்தும் பார்வையா அச்சப்படுத்தும் பார்வையா 
எகத்தாளப் பார்வையா நையாண்டிப் பார்வையா 
என்று

ஒருவர் 
அடுக்கடுக்காய் சொற்கள் தந்து  
ஆனந்தம் பெய்தாலும்   
அவை ஆத்மார்த்தம் இல்லாத போது 
வேதனைத்தான் நம் நெஞ்சில் தங்கும்  
அவர் 
அருவிபோல் சொற்கள் கொட்டி 
புகழ்மாலை செய்தாலும் 
அவைப் பொய்களென உணர்ந்தப் பின்னே  
புத்திகெட்டதேன் என நம்மில் 
வருத்தம்தான் மிஞ்சும்

பக்கம்பக்கமாய் சொல்கள் செய்து 
பந்தி வைத்தாலும் 
ஒருவர் கண்களும் கூடவே அவர் 
செயல்களும் உணர்த்திவிடும் 
அந்த சொல்லாழி பொய்க் கரிக்கும் 
நச்சு நீர் சுமப்பது என்று.  
அதை நம்பினோர் பின் நாமத்துடன்  
நடுத்தெரு நிற்பார் என்று.  

ஆகவே 
சொல்லும் சொற்கள் பெரிதா  
அல்ல  
செய்யும் செயல்கள் பெரிதா  
என்றால் 

செய்யும் செயல்கள் தான் பெரிது 
அவைப் பேசுவதே உண்மை….. 

கதைகள் கட்டி 
கற்பனை ஊற்றி சொல்லும் 
ஏமாற்றுச் 
சொற்கள் எவ்வளவு அழகாயினும் 
கேட்பதற்கு நன்றாக இருப்பினும் 
அவை வீண் 
என முரசொலிக்கிறேன்.  

சொற்கள் 
காதுகளில் பொய்கள் கொட்டும் 
கண்களில் கண்ணீர் பெருக்கும் 
உள்ளத்தில் குழப்பம் நிரப்பும் 
நாவினில் கோபம் நிறைக்கும் 
உணர்வில் வலிகள் சேர்க்கும் 
உயிரை மெல்லமெல்ல கொல்லும் 
கடைசியில் 
உறவுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 

கண்கள் சிரிப்பது  
ஆன்மா புன்னைகைப்பது 
உள்ளம் அணைப்பது 
அகம் அன்புசெய்வது 
போன்ற செயல்கள் 
உண்மை உணர்வுகளை படம்காட்டி விடும்  
ஆகவே சொற்கள் வீண் மட்டுமல்ல மிக ஆபத்தானவையும் கூட..  

என்றாலும் 
மக்களாகிய நாம் 
சொற்களை நம்பி அவை தரும் தாற்காலிக போதையில் மதிகெட்டு சீரழிந்து கொண்டிருக்கிறோம் என்பது தான் நிஜம்
எனச் சொல்லி இதை முடிக்கிறேன்.  

- புவனா கருணாகரன், யு.எஸ்.ஏ.

From around the web